
இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயின் அலி ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கு சாதகமாக இருப்பதால் அது கிட்டதட்ட இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
2019 ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டராக மொயின் அலி இருந்தார். பின்னர் 2024ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
தற்போது நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி மோசமாக விளையாடி குரூப் ஸ்டேஜிலிருந்து வெளியேறியது.
டி20 கிரிக்கெட்டின் எழுச்சியினால் பாகிஸ்தான், துபையில் நடைபெறும் இந்தப் போட்டிகளைக் காண பார்வையாளர்கள் குறைந்துவிட்டார்கள்.
இந்நிலையில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் மொயின் அலி கூறியதாவது:
ஒருநாள் கிரிக்கெட் இறந்துவிட்டது
உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளைத் தவிர்த்து ஒருநாள் போட்டிகள் கிட்டதட்ட இறந்துவிட்டன. பல காரணங்களால் இதை விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை.
ஒருநாள் கிரிக்கெட்டில் இருக்கும் விதிமுறைகள் மிகவும் மோசமாக இருக்கிறது. முதல் பவர்பிளேவுக்குப் பிறகு கூடுதலாக ஃபீல்டர்களை நிற்க வைப்பது விக்கெட் எடுக்கக்கூடாது என்பதற்காகவே வைக்கப்பட்ட கொடூரமான விதிமுறையாகும். சிலருக்கு 60,70 சராசரி வைத்திருக்கக் காரணம் இதுதான்.
ஒரு பேட்டருக்கு நாம் சிறிது அழுத்தத்தை தரும்போது அவர் ரிவர்ஸ்-ஸ்வீப் ஷாட் அடித்தால் ஒரு ரன் கிடைத்தால் பரவாயில்லை பவுண்டரியாக மாறுகிறது. அதனால்தான், பேட்டர்களால் அதிகமாக ரன்களை குவிக்க முடிகிறது.
இரண்டு புதிய பந்துகள் வேண்டும்
இதையெல்லாம்விட ஒரு போட்டியில் 2 புதிய பந்துகள் வேண்டும். ரிவர்ஸ் ஸ்விங் ஆகவில்லையெனில் புதிய முயற்சிக்கு அங்கு வேளையே இல்லை.
ஒருநாள் கிரிக்கெட்டில் அனைத்துமே பேட்டர்களுக்கு சாதகமாகவே இருக்கின்றன. அதனால்தான் 50ஓவர் கொண்ட இந்தப் போட்டிகள் இறந்துவிட்டன என்கிறேன்.
உள்ளூர் டி20 கிரிக்கெட்டுகள் எல்லாரையும் விழுங்கிவிடுகிறது. ஏன்னெனில் எல்லா இடங்களிலும் பணத்தை வாரி இறைக்கிறார்கள். அதனால் வீரர்களும் அனைத்து இடங்களிலும் விளையாட முயற்சிக்கிறார்கள். அது மிகவும் கடினமானது.
இன்னும் சில ஆண்டுகளில் சிலர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று உள்ளூர் டி20 போட்டிகளில் விளையாடுவார்கள் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.