ஐபிஎல் தொடரில் விளையாட பிரபல இங்கிலாந்து வீரருக்கு 2 ஆண்டுகள் தடை; காரணம் என்ன?

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பிரபல இங்கிலாந்து வீரருக்கு தடை விதிக்கப்பட உள்ளது.
ஐபிஎல் தொடரில் விளையாட பிரபல இங்கிலாந்து வீரருக்கு 2 ஆண்டுகள் தடை; காரணம் என்ன?
படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)
Published on
Updated on
2 min read

ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கு பிரபல இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்குக்கு தடை விதிக்கப்பட உள்ளது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவை எதிர்த்து விளையாடவுள்ளது.

ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர்.

2 ஆண்டுகள் தடை

விரைவில் ஐபிஎல் தொடர் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதில் கவனம் செலுத்த உள்ளதால் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஹாரி ப்ரூக் (கோப்புப் படம்)
ஹாரி ப்ரூக் (கோப்புப் படம்)படம் | இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (எக்ஸ்)

இது தொடர்பாக ஹாரி ப்ரூக் அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: எதிர்வரும் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவது என்ற மிகவும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். என்னுடைய இந்த முடிவுக்காக தில்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகத்திடமும், அந்த அணியின் ரசிகர்களிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். இங்கிலாந்து அணிக்காக நேரம் ஒதுக்க இது உண்மையில் மிகவும் முக்கியமான நேரம். இங்கிலாந்து அணி அடுத்து விளையாடவுள்ள தொடர்களுக்காக தயாராக விரும்புகிறேன்.

என்னுடைய இந்த முடிவை அனைவரும் புரிந்துகொள்ள மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என நான் எதிர்பார்க்கவும் இல்லை. நான் எதனை சரி என நம்புகிறேனோ அதனை செய்ய விரும்புகிறேன். இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதிலேயே கவனம் செலுத்த விரும்புகிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் மெகா ஏலத்தில் ஹாரி ப்ரூக் தில்லி கேபிடல்ஸ் அணியால் ரூ.6.25 கோடிக்கு வாங்கப்பட்டிருந்தார். தற்போது அவரது திடீர் விலகல் அந்த அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் ஒருவர் ஐபிஎல் தொடரில் விளையாடத் தவறும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட வீரருக்கு இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட பிசிசிஐ சார்பில் தடை விதிக்கப்படும். அதன் அடிப்படையில், அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாட ஹாரி ப்ரூக்குக்கு தடை விதிக்கப்படவுள்ளது. காயம் ஏற்பட்டால் மட்டுமே வீரர்கள் ஐபிஎல் தொடரிலிருந்து விலக அனுமதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணி வருகிற ஜூன் மாதத்தில் அதன் சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன் பின், நவம்பர் - ஜனவரி இடைவெளியில் ஆஷஸ் தொடரில் விளையாடவுள்ளது.

26 வயதாகும் ஹாரி ப்ரூக் அவரது பாட்டி இறந்துவிட்ட காரணத்தால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்தும் விலகியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com