
மே.இ.தீ. அணியில் வேகப் பந்து வீச்சாளர்களின் தந்தையாக கருதப்படும் முன்னாள் வீரர் ஆண்டி ராபட்ஸ் ஐசிசியின் நடவடிக்கைகள் இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஐசிசி என்பது சர்வதேச கிரிக்கெட் வாரியமாக அல்லாமல் இந்திய கிரிக்கெட் வாரியமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி ஒரே திடலில் விளையாடியது மிகப்பெரிய சர்ச்சை ஆனது. இந்திய அணியும் இறுதிப் போட்டியில் வென்றது.
மற்ற அணிகள் பாகிஸ்தான், துபை என மாறிமாறி விளையாடியது இந்திய அணி துபையில் விளையாடியது மோசடி என பலரும் குற்றம் சுமத்திய வேளையில் மே.இ.தீ. லெஜெண்ட் ஆண்டி ராப்ட்ஸ் கூறியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆஸி. கேப்டன், தென்னாப்பிரிக்க வீரர்கள், பாகிஸ்தான் வீரர்கள் என பலரும் துபையில் மட்டுமே விளையாடுவது இந்தியாவுக்கு ஆதாயம் எனக் கூறினார்கள். ஆனால், ஷமியை தவிர இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் யாரும் இதை ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐசிசி- இல்லை என்று சொல்லிப் பழக வேண்டும்
ஆண்டி ராபட்ஸ் கூறியதாவது:
ஐசிசி இந்தியாவுக்கு இல்லை என்று சொல்லிப் பழக வேண்டும். கடந்த டி20 உலகக் கோப்பையிலும் அரையிறுதிப் போட்டி எங்கு விளையாடுகிறார்கள் என முன்னமே தெரிந்தது இந்தியாவுக்கு ஆதாயமாக இருந்தது.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா எங்குமே பயணிக்கவில்லை. ஒரு தொடரில் எப்படி ஓர் அணி மட்டும் எங்குமே பயணிக்காமல் இருக்க முடியும்?
ஐசிசி- இந்திய கிரிக்கெட் வாரியமாக செயல்படுகிறது
இது நியாயமானதல்ல, இது கிரிக்கெட். இந்தியாவிலிருந்து அதிகமான பணம் கிடைக்கிறதுதான் ஆனால், கிரிக்கெட் ஒரு நாட்டுக்காக மட்டும் இருக்கக் கூடாது. தற்போது கிரிக்கெட் ஒரு நாட்டுக்காக மட்டுமே விளையாடுவதாக இருக்கிறது.
ஐசிசி என்பது இந்தியன் கிரிக்கெட் வாரியமாக இருக்கிறது. இந்தியாதான் அனைத்தையும் ஆணையிடுகிறது.
கிரிக்கெட்டில் வைடு, நோ பால் அனைத்தையும் நீக்கிவிடலாமென இந்தியா கூறினால் நாளையே ஐசிசி இந்தியாவை திருப்தி செய்ய அதனை நிறைவேற்றும் என்றார்.