
சச்சின் டெண்டுல்கர் (40), ராகுல் திராவிட் (39), விவிஎஸ் லக்ஷ்மணனை (38) விட குறைவான வயதில் விராட் கோலி (36) ஓய்வுபெற அவரது ஈகோவும் நார்சிஸ்டிக் ஆளுமைக் குறைபாடும்தான் காரணங்கள் என்றால் வியப்பதற்கில்லை.
நார்சிஸ்டிக் ஆளுமைக் குறைபாடு (Narcissistic personality disorder) என்பது நீண்ட காலமாக மனிதருக்குள் நிகழக் கூடிய ஆளுமைச் சிதைவை குறிப்பதாகும். இந்தக் குறைபாடு உள்ளவர்கள் தங்களின் சுய உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்களாகவும், அதிகமாக பாராட்டுகளை விரும்புபவர்களாகவும், மற்றவர்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யாமலும் இருப்பார்கள். எனவேதான் விராட் கோலி நன்றாக விளையாடினாலும் அவரது தலைமையில் கோப்பையை வென்றுதர முடியவில்லை.
இதென்ன வித்தியாசமான நோய் என விராட் கோலி ரசிகர்கள் கொந்தளிக்க வேண்டாம். கோலியைத் தொடர்ச்சியாக கவனித்து வந்தவர்களுக்கு இது 2020 ஆம் ஆண்டே தொடங்கியது என்றும் கடந்த பிஜிடி 2025 (பார்டர் கவாஸ்கர் டிராபி) தொடரில் ஒரே மாதிரி 8 இன்னிங்ஸிலும் ஆட்டமிழந்தபோதே முடிவுக்கு வந்ததென்றும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.
தீவிரமடைந்த ஆக்ரோஷமான கொண்டாட்டம்
விராட் கோலி இயற்கையான திறமைசாலி இல்லை (அவரே சொன்னதுதான்!). ஆனால், தனது கடினமான உழைப்பினாலும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தினாலும் வழக்கமான ஷாட்டுகளைக்கூட அழகாக அடித்து கிரிக்கெட் உலகில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர். கிட்டத்தட்ட கிறிஸ்டியானோ ரொனால்டோ மாதிரிதான். அதனால்தான் என்னவோ அவரைப் போலவே ஐபிஎல் தொடரிலும் ஐசிசி தொடரிலும் தனது கேப்டன்சியில் கோப்பையை வென்று கொடுக்க முடியவில்லை போலும்!
விராட் கோலி தனது ஆக்ரோஷமான கொண்டாட்டத்துக்குப் பெயர் போனவர். இளம் வயதில் சச்சின் டெண்டுல்கரும் அப்படிதான் இருந்தார். ஆனால், காலம் செல்ல செல்ல சச்சின் அதனை மாற்றிக் கொண்டார். ஆனால், விராட் கோலியோ தனது பேட்டிங் திறமை குறைந்ததை மறைக்கவே ஆக்ரோஷமான கொண்டாட்டம் - அக்ரஷிவ் செலிபிரேஷன் (Aggressive celebration) எனும் வேதாளத்தை தனது முதுகில் சுமந்துகொள்ளத் தொடங்கிவிட்டார்.
எதிரணியில் யார் நன்றாக விளையாடினாலும் சூர்யகுமார் யாதவ் முதலில் சென்று வாழ்த்துவார். எதிரணியில் யாராவது நன்றாக விளையாடினால் விராட் கோலி கோபமடைந்து அவர்களை முறைப்பது, இடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார். கவனித்துப் பார்க்கும்போது, இவையெல்லாமும்கூட 2020-21-க்கு பிறகுதான் அதிகரிக்கத் தொடங்கியதாக தோன்றுகிறது. அதற்கு முன்னதாக கோலி இந்த எல்லையை எட்டவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
கவன ஈர்ப்புக் குறைபாடு
சில எடுத்துக்காட்டுகள்:
1. சூர்ய குமார் யாதவை முறைத்தல்
2. நவீன் உல் ஹக்கை முறைத்தல்
3. சவுரவ் கங்குலியை முறைத்தல்
4. ஜானி பெயர்ஸ்டோவுடன் சண்டை
5. கௌதம் கம்பீருடன் சண்டை
6. சாம் கான்ஸ்டாஸுடன் மோதல்
2020-க்கு முன்பாக 30 டெஸ்ட், 30 ஒருநாள், 1 டி20 சதங்களை அடித்த விராட் கோலி அதற்கு பிறகு 2025 வரை 5 டெஸ்ட், 10 ஒருநாள், 1 டி20 சதங்களை அடித்தார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் 5 ஆண்டுகளில் 5 சதங்களை மட்டுமே அடித்தார்.
சரி, அப்படி 2020 இல் அவருக்கு என்னதான் நடந்தது? இது அவருக்கு மட்டுமே தெரியும். ஆனால், 2021-இல் அவருக்கு முதல் குழந்தை பிறந்தது குறிப்பிடத் தக்கது. ஒரு கணக்கிற்கு என வைத்துக்கொண்டால், அதன் பிறகுதான் விராட் கோலி பேட்டிங் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஆக்ரோஷ கொண்டாட்டங்களும் அதிகரித்தன.
விராட் கோலிக்கு கவன ஈர்ப்புக் குறைபாடு - attention seeking பழக்கம் இருப்பது கவனித்துப் பார்க்கிற அனைவருக்கும் தெரியும். நடனம், கொண்டாட்டம் என களத்தில் ஏதாவது செய்துகொண்டே இருப்பார். விராட் கோலியின் தந்தை இறந்த பிறகு அடுத்தநாளே ரஞ்சி கோப்பையில் விளையாடியதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம்.
விராட் வாழ்க்கையில் விளையாடிய பிசிசிஐ
ஃபார்ம் என்பது என்ன? அது ஒவ்வொருவரது மனநிலை என்று தத்துவயிலாளர்கள் கூறுகிறார்கள்.
ரோஹித் சர்மா ஒருபக்கம் தொடர்ச்சியாக ஐபிஎல் கோப்பைகளை வென்றதால் அவரை இந்திய டி20 அணிக்கு கேப்டனாக நியமிக்க பிசிசிஐ விரும்பியது.
2021 நவம்பரில் டி20 கேப்டன் பதவியில் இருந்து விராட் விலகிய பிறகு, வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு (டி20, ஒருநாள்) ஒரே கேப்டன் வேண்டும் என பிசிசிஐ விரும்பியதால் விராட் கோலி மிகவும் நெருக்கடிக்கு உள்ளானார். அதனால் ஒருநாள் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விருப்பம் இல்லாமலே டிச. 2021-இல் விலகினார்.
இந்த விரக்தியினாலும் தென்னாப்பிரிக்காவுடன் 2 ஆவது டெஸ்ட்டில் விராட் கோலி நீக்கப்பட்டதும் பின்னர் அந்தத் தொடரை இழந்ததும் கோலியை டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து (ஜன. 2022) வெளியேற உடனடி காரணமாக அமைந்தது. சில மாதங்களில் அவரது கிரிக்கெட் வாழ்க்கை மோசமாகிவிட்டது (இந்த காலகட்டத்தில் விராட் கோலி விஷயத்தில் பிசிசிஐ நடந்துகொண்ட விதமும்கூட இன்னமும் விமர்சனத்துக்குரியதாகவே இருக்கிற ஒன்றுதான்).
உடனடி வீழ்ச்சிக்குக் காரணமான ஈகோ
குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், 2020-2021 வரை அப்போது நடந்த விஷயங்கள் எல்லாமே விராட் கோலியை மனதளவில் மிகவும் பாதித்தன. அப்போது தொடங்கியது அவரது வீழ்ச்சி. ஆனால், அவரது ஈகோதான் அவரது உடனடி வீழ்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது.
பிஜிடி தொடருக்கு முன்பாக ஒரு நூறு முறையாவது அவருக்கு Out side of stump பந்துகளை அடிக்க வேண்டாம் என பலரும் அறிவுரை வழங்கினார்கள். விராட் கோலி எதையுமே காதில் வாங்காமல் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் என விளையாடி 9 இன்னிங்ஸிலும் ஒரேமாதிரி ஆட்டமிழந்தார்.
மீண்டும் ஒரு சச்சின் உதாரணம். சச்சினுக்கும் இந்த out side off stump-இல் (ஸ்டம்புக்கு ஆஃப் ஸைடு வரும் பந்துகள்) வரும் பந்துகளை அடித்து ஆட்டமிழக்கும் பிரச்சினை இருந்தது. அதே ஆஸ்திரேலியாவிடம்தான் சச்சின் டெண்டுல்கர் ஆஃப் சைடு பந்துகளை கவர் டிரைவ் ஆடாமலே தனது அதிகபட்ச ரன்னான 241 ரன்களை அடித்து அசத்தினார். இதைதான் விராட் கோலியால் செய்ய முடியவில்லை. மனதை, அதன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த வேண்டும். அப்படிச் செய்பவர்தான் தலைசிறந்த விளையாட்டு வீரனாக மாற முடியும்.
தன்னை மாற்றிக் கொள்ள முடியாத விராட் கோலியின் ஈகோவினாலும் பேட்டிங்கின் மூலமாக கவனம் ஈர்த்த அவரால் அதைச் செய்ய முடியாதபோது களத்தில் ஏதாவது செய்து கொண்டாட்டம் என்ற பெயரில் பிறரைத் தேவையில்லாமல் வம்பிழுக்கும் செயல்களாலும் அவரது ஈகோவுக்கு அவரே தீனி போட்டுக்கொண்டார். அங்குதான் அவரது ஆளுமைத் திறன் சிதைந்தன.
மீண்டு வருவாரா?
இன்னும் 4 - 5 ஆண்டுகள் டெஸ்ட்டில் கேப்டனாகவே விளையாடி உலக அரங்கில் அதிக வெற்றி பெற்ற டெஸ்ட் கேப்டனாக விராட் கோலியால் இருந்திருக்க முடியாமல் போனதற்கு அழுத்தத்தை அவரால் சரியாகக் கையாள முடியாமல் போனதே ஆகும்.
சொந்த மண்ணில் 31 போட்டிகளில் 24 வெற்றிகள், 2 தோல்விகள், 5 டிராவில் முடிந்தன. வெளிநாடுகளில் 37 போட்டிகளில் 16 வெற்றிகள், 15 தோல்விகள், 6 டிராவில் முடிந்தன.
2022-ல் இதுபற்றி விராட் கோலி, "எனது கேரியரில் நிறைய நடந்தது. இந்தியாவுக்காக 7 - 8 வருடங்கள் கேப்டனாக இருந்த நான் பெங்களூரு அணிக்கு 9 வருடங்கள் தலைமை தாங்கினேன். பேட்டிங் ரீதியாக என் மீது ஒவ்வொரு போட்டியிலும் எதிர்பார்ப்புகள் எழுந்தன. அதனால் 24 மணி நேரமும் நான் அம்பலப்படுத்தப்பட்டேன். அதை தாங்க முடியவில்லை. மகிழ்ச்சியாக விளையாட கேப்டன் பொறுப்புகளைக் கைவிட்டேன்" எனக் கூறியிருந்தார்.
கடினமான நேரங்களில் தனது உணர்ச்சிகளைச் சரியாகக் கையாண்டு இருந்தால் சச்சின் சாதனைகளை எளிதாகவே விராட் கோலி முறியடித்து இருப்பார். அதேபோல் பிசிசிஐயும் அவருக்கு அந்த நேரத்தில் உறுதுணையாக இல்லை என்பதையும் அடிக்கோடிடத்தான் வேண்டும்.
இனிமேல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும்தான் விளையாடப் போகிறார் விராட் கோலி. முற்றிலுமாகத் தன் குணாதிசயங்களைத் திருத்திக் கொள்வாரேயானால் புதிய உச்சங்களைத் தொடலாம்; எதிர்பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.