

சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் அறிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான வில்லியம்சன், தேசிய அணிக்காக 93 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில், 18 அரைசதங்களுடன் 2575 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்து டி20 அணிக்கு கேப்டனாக 75 போட்டிகளில் செயல்பட்டார். இவரது தலைமையில், 3 முறை நியூசிலாந்து அணி, டி20 உலகக் கோப்பையில் பங்கேற்றுள்ளது.
அடுத்தாண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்குத் தொடருக்கு முன்னதாக தனது திடீர் முடிவை வில்லியம்சன் எடுத்துள்ளார்.
வில்லியம்சன், 2016 ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணியை அரையிறுதி வரை அணியை அழைத்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து, 2021ஆம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை நியூசிலாந்து அணி முன்னேறியது. ஆனால், ஆஸ்திரேலிய அணி வென்றது. அடுத்து, 2022ஆம் ஆண்டிலும் நியூசிலாந்து அணியை அரையிறுக்கு அழைத்துச் சென்றார் வில்லியம்சன்.
2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு, வில்லியம்சன் ஒரு டி20 போட்டிகூட விளையாடவில்லை. இதனால், வில்லியம்சன் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
ஐபில், பிபிஎல் போன்ற தொடர்களில் விளையாடிவந்த வில்லியம்சன், தொடர்ந்து டி20 லீக் போட்டிகளில் விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வில்லியம்சன் கூறுகையில், “இங்கே நிறைய டி20 போட்டியில் விளையாடக்கூடிய திறமையாளர்கள் இருக்கின்றனர். இவர்களை கிரிக்கெட்டிற்குள் கொண்டு வந்து உலகக் கோப்பைக்குத் தயார்படுத்துவதற்கு முக்கியமானதாக இருக்கும்.
சாண்ட்னர் ஒரு சிறந்த கேப்டன். அவர் நியூசிலாந்து அணியுடன் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளார். டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணியை முன்னோக்கி தள்ள வேண்டிய நேரம் இது. நான் தொலைவில் இருந்து அவர்களுக்கு ஆதரவளிப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.