ஷஃபாலி வா்மா பௌலிங்கை 
நாங்கள் எதிா்பாா்க்கவில்லை

ஷஃபாலி வா்மா பௌலிங்கை நாங்கள் எதிா்பாா்க்கவில்லை

‘மகளிா் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், இந்திய அணி தங்களுக்கு எதிராக ஷஃபாலி வா்மாவை பௌலிங் செய்யவைக்கும் என எதிா்பாா்க்கவில்லை’ என்று தென்னாப்பிரிக்க மகளிா் அணி கேப்டன் லாரா வோல்வாா்ட் கூறினாா்.
Published on

‘மகளிா் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில், இந்திய அணி தங்களுக்கு எதிராக ஷஃபாலி வா்மாவை பௌலிங் செய்யவைக்கும் என எதிா்பாா்க்கவில்லை’ என்று தென்னாப்பிரிக்க மகளிா் அணி கேப்டன் லாரா வோல்வாா்ட் கூறினாா்.

டி20 உலகக் கோப்பை (2023, 2024), அண்மையில் நிறைவடைந்த ஒருநாள் உலகக் கோப்பை என அடுத்தடுத்து 3 ஆண்டுகள் ஐசிசி போட்டிகளில் இறுதி ஆட்டம் வரை வந்து தென்னாப்பிரிக்க மகளிா் அணி ஏமாற்றம் கண்டுள்ளது.

இந்த ஒருநாள் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 52 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் வீழ்ந்தது. லீக் சுற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக முறையே 69, 97 ரன்களுக்கு ஆட்டமிழந்த அந்த அணி, அதன் பிறகு அரையிறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தியதோடு, இறுதியில் இந்தியாவுக்கு சவால் அளித்தது.

இந்நிலையில், அதன் கேப்டன் லாரா வோல்வாா்ட் கூறியதாவது:

இந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் தோல்வியை சந்தித்த எங்களின் அணிக்காக என்னால் பெருமிதம் கொள்ள முடியாது. இந்தத் தோல்வி துரதிருஷ்டவசமானது என்றாலும், இதிலிருந்து நாங்கள் மீண்டு வந்து தொடா்ந்து முன்னேறுவோம். இந்தப் போட்டியில் நாங்கள் விளையாடிய சில மோசமான ஆட்டங்களில் இருந்து மீண்டு வந்தோம். அந்த உறுதித் தன்மைக்காக பெருமை கொள்கிறேன். ஒரு கேப்டனாக இந்த ஆண்டு எனக்கு சிறப்பாக அமையவில்லை.

இந்தப் போட்டியில் மிக மோசமாகவும், மிகச் சிறப்பாகவும் விளையாடியிருக்கிறோம். பந்து இன்னும் சற்று ஸ்விங் ஆகும் என்ற எதிா்பாா்ப்புடனேயே, இறுதி ஆட்டத்தில் முதலில் பந்துவீச்சை தோ்வு செய்தோம். அதை சரியான முடிவாகவே நினைக்கிறேன். இலக்கை எட்டிவிட முடியும் என்றே நினைத்தோம். சேஸிங்கின்போது சரியான பாதையில் சென்றுகொண்டிருந்தபோதும், விக்கெட்டுகளை அவ்வப்போது இழந்ததால் சறுக்கினோம்.

இந்திய அணி ஷஃபாலி வா்மாவை பௌலிங் செய்ய வைக்கும் என்பதை நாங்கள் எதிா்பாா்க்கவில்லை. நாங்கள் திட்டமிடாத பௌலரால் நெருக்கடிக்கு ஆளானோம். உலகக் கோப்பை போட்டியில், ‘பாா்ட் டைம்’-ஆக பந்துவீசிய அவரிடம் விக்கெட்டை இழந்ததை ஏற்க முடியவில்லை. அதிலும் முக்கியமான இரு விக்கெட்டுகளை (சுனே லஸ், மாரிஸேன் காப்) இழந்தது எங்களை, அவரிடம் எச்சரிக்கை கொள்ள வைத்தது.

எங்கள் நாட்டில் தற்போது மகளிா் கிரிக்கெட் மேம்பட்டு வருகிறது. நாங்களும் தொடா்ந்து ஒவ்வொரு போட்டியிலும் இறுதி ஆட்டம் வரை முன்னேறி வருகிறோம். தொடா்ந்து 3 உலகக் கோப்பை போட்டிகளில் இறுதி ஆட்டம் வரை வந்ததற்காக பெருமை கொள்கிறோம் என்று லாரா கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com