

உலகக் கோப்பையை வென்றதை நினைவுகூரும் வகையில் இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், ஸ்மிருதி மந்தனா இருவரும் தங்களது கைகளில் உலகக் கோப்பையை டாட்டூ போட்டுக்கொண்டனர்.
மகளிருக்கான 13-வது ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது.
இந்த நிலையில், 52 ஆண்டுகளில் முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றதை நினைவுகூரும் வகையில் இந்திய மகளிரணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் மற்றும் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா இருவரும் தங்களது கைகளில் உலகக் கோப்பை - 2025 என்று பச்சை குத்திக்கொண்டுள்ளனர்.
இதுதொடர்பாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் வெளியிட்டுள்ள பதிவில், “என் கையிலும் இதயத்திலும் என்றென்றும் பதிந்துவிட்டது. முதல் நாள் முதல் உனக்காகக் காத்திருந்தேன். இப்போது தினமும் காலையில் உன்னைப் பார்த்து நன்றியுடன் இருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார்.
உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு பச்சை குத்திக்கொள்வது விளையாட்டில் சகஜம்தான் என்றாலும், ஹர்மன்ப்ரீத்தும் ஸ்மிருதி மந்தனாவும் ஒரே மாதிரியாக பச்சை குத்திக்கொண்டது அவர்களின் நீண்டகால நட்பை மேலும் எடுத்துக்காட்டுவதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.