

உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிரணியினர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
மகளிருக்கான 13-வது ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை வென்றது.
இந்த நிலையில், இந்திய அணியை வாழ்த்துவதற்காக பிரதமர் மோடி, வீராங்கனைகளை தில்லியில் உள்ள தனது இல்லத்துக்கு அழைத்திருந்தார். அதன்படி, மும்பையில் விமான நிலையத்தில் இருந்து இந்திய அணியினர் நேற்று தில்லி வந்தனர். அவர்களுடன் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜூம்தாரும் கலந்துகொண்டார்.
தில்லியில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அங்கிருந்தவர்கள் மட்டும் வீராங்கனைகளை வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து தில்லியில் லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினரை வரவேற்றார்.
மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய அணியினர், பிரதமர் மோடியுடன் இணைந்து குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
பிரதமர் அணி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், தொடர் மூன்று தோல்விகள் மற்றும் சமூக ஊடகங்களில் அவர்கள் சந்தித்த விமர்சனங்களுக்கு கோப்பை வென்றுள்ளதைப் பிரதமர் மோடி பாராட்டினார்.
கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர், 2017 ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தோல்விக்குப் பின்னர் பிரதமர் மோடியைச் சந்தித்தது குறித்து நினைவு கூர்ந்தார்.
துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா பேசுகையில், “உலகக் கோப்பைத் தொடரில் கோப்பையை வெல்லுவதற்கு பிரதமர் மோடி ஊக்கப்படுத்தியதாகவும், அவர் அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருந்ததாகவும்” கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.