

உலகக் கோப்பை வென்ற மகளிர் அணியினருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தில்லியில் உள்ள இல்லத்துக்கு நேற்று(நவ.5) அழைத்துப் பாராட்டி அவர்களுக்கு விருந்தளித்தார்.
மகளிருக்கான 13-வது ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் கடந்த நவ. 2 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.
முதல்முறையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசியின் பரிசுத் தொகையைத் தவிர்த்து பிசிசிஐ சார்பில் ரூ.51 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தனது இல்லத்தில் கோப்பையை வென்ற இந்திய அணியினரை அழைத்துப் பாராட்டி அவர்களுடன் உரையாடினார்.
பின்னர், பிரதமரின் இல்லத்தில் சாம்பியன் பட்டம் பெற்ற வீராங்கனைகள் உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு, பிரதமர் மோடியே அனைவரையும் உபசரித்தார்.
இந்த நிலையில், லீக் சுற்றில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் காலில் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய தொடக்க ஆட்டக்காரர் பிரதிகா ராவல், காலில் கட்டுடன் சக்கர நாற்காலியில் பிரதமர் மோடியைச் சந்திக்க சென்றிருந்தார்.
உணவு விருந்தின்போது சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதிகா ராவல், உணவை எடுத்துக் கொள்வதற்கு சிரமப்பட்டதைப் பார்த்த பிரதமர் மோடி, அவருக்கு உணவை எடுத்துக் கொடுத்து சிறப்பாக கவனித்தார். இந்த விடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.