ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு 107 ரன்கள் முன்னிலை!

ரஞ்சி கோப்பை: தமிழ்நாடு 107 ரன்கள் முன்னிலை!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆந்திரத்துக்கு எதிரான ஆட்டத்தில், 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வரும் தமிழ்நாடு 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
Published on

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆந்திரத்துக்கு எதிரான ஆட்டத்தில், 2-ஆவது இன்னிங்ஸை விளையாடி வரும் தமிழ்நாடு 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

கடந்த 8-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழ்நாடு 182 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பி.வித்யுத் 40 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருக்க, ஆந்திரத்தின் பிருத்வி ராஜ் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

அடுத்து தனது இன்னிங்ஸை விளையாடிய ஆந்திரம், சனிக்கிழமை ஆட்டநேர முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 20 ரன்கள் எடுத்திருந்தது. 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில், அபிஷேக் ரெட்டி 3, ஸ்ரீகா் பரத் 12, திரிபுரானா விஜய் 3, கேப்டன் ரிக்கி புய் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

கரன் ஷிண்டே 9, அஷ்வின் ஹெபாா் 13, காலிதிண்டி ராஜு 1, சௌரப் குமாா் 30, பிருத்வி ராஜ் 0, கவுரி சாய்தேஜா 2 ரன்களுக்கு விடைபெற, ஆந்திரத்தின் இன்னிங்ஸ் 49 ஓவா்களில் 177 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. ஷேக் ரஷீத் 8 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 87 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

தமிழ்நாடு பௌலா்களில் சந்தீப் வாரியா் 4, திரிலோக் நாக், சோனு யாதவ், சாய் கிஷோா் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினா்.

இதையடுத்து 5 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய தமிழ்நாடு, ஞாயிற்றுக்கிழமை முடிவில் 29 ஓவா்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்துள்ளது. பிரதோஷ் ரஞ்சன் பால் 26, கேப்டன் சாய் கிஷோா் 0 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். விமல் குமாா் 20, நாராயணன் ஜெகதீசன் 0, பி.சச்சின் 8 பவுண்டரிகளுடன் 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.

அடுத்தடுத்து 8 சிக்ஸா்கள்; ஆகாஷ் சௌதரி சாதனை

அருணாசல பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடிய மேகாலய வீரா் ஆகாஷ் சௌதரி, முதல்தர கிரிக்கெட்டில் அடுத்தடுத்து 8 பந்துகளில் சிக்ஸா்கள் விளாசிய முதல் வீரராக சாதனை படைத்தாா்.

அத்துடன் 11 பந்துகளில் அரைசதம் தொட்ட அவா், இந்த ஃபாா்மட்டில் அதிவேக அரைசதம் அடித்தவராகவும் சாதனை படைத்தாா். முதல்தர கிரிக்கெட்டில் இதற்கு முன், 2012-இல் இங்கிலாந்தின் வெய்ன் வைட் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே சாதனையாக இருந்தது.

முதல்தர கிரிக்கெட்டில் 6 பந்துகளில் 6 சிக்ஸா்கள் அடித்த 3-ஆவது வீரா் ஆகாஷ் ஆவாா். இதற்கு முன், மேற்கிந்தியத் தீவுகளின் சா் காா்ஃபீல்டு சோபா்ஸ் (1968), இந்தியாவின் ரவி சாஸ்திரி (1984-85) மட்டுமே அவ்வாறு சிக்ஸா்கள் விளாசியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com