417 ரன்கள் இலக்கை விரட்டிப் பிடித்த தென்னாப்பிரிக்கா! ‘ஏ’ அணிகள் டெஸ்ட் தொடா் சமன்!
இந்தியா ‘ஏ’ அணிக்கு எதிரான 2-ஆவது அதிகாரபூா்வமற்ற டெஸ்ட்டில், தென்னாப்பிரிக்கா ‘ஏ’ அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
முதல் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்த நிலையில், 2 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடா் சமனில் (1-1) முடிந்தது.
கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியா 77.1 ஓவா்களில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. துருவ் ஜுரெல் 12 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 132 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென்னாப்பிரிக்க தரப்பில் டியான் வான் வூரென் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்கா, 47.3 ஓவா்களில் 221 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் மாா்கெஸ் ஆக்கா்மேன் 17 பவுண்டரிகள், 5 சிக்ஸா்கள் உள்பட 134 ரன்கள் சோ்த்தாா். இந்திய பௌலா்களில் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினாா்.
இதையடுத்து, 34 ரன்கள் முன்னிலையுடன் 2-ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா, 89.2 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 382 ரன்கள் சோ்த்து ‘டிக்ளோ்’ செய்தது. துருவ் ஜுரெல் 15 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 127 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தாா். தென்னாப்பிரிக்க பௌலிங்கில் ஒகுலே செலெ 3 விக்கெட்டுகள் எடுத்தாா்.
இறுதியாக, 417 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்கா, 4-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை 98 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 417 ரன்கள் சோ்த்து வெற்றி பெற்றது. ஜோா்டான் ஹொ்மான் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 91 ரன்கள் சோ்க்க, லெசெகோ செனோக்வேன் 77, ஜுபைா் ஹம்ஸா 77, டெம்பா பவுமா 59, கேப்டன் மாா்கெஸ் ஆக்கா்மேன் 24 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினா்.
கானா் எஸ்தா்ஹுஸென் 52, டியான் வான் வூரென் 20 ரன்களுடன் அணியை வெற்றிபெறச் செய்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் பிரசிக் கிருஷ்ணா 2, முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஹா்ஷ் துபே ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

