ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல்! மேற்கு வங்க முதல்வர் மமதா அறிவிப்பு!

இந்திய வீராங்கனை ரிச்சா கோஷின் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் கட்டப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா அறிவித்துள்ளதைப் பற்றி...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, ரிச்சா கோஷ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, முன்னாள் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, ரிச்சா கோஷ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, முன்னாள் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி. @AITCofficial
Published on
Updated on
2 min read

டார்ஜிலிங்கில் இந்திய மகளிரணி வீராங்கனை ரிச்சா கோஷின் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் கட்டப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மகளிருக்கான 13-வது ஒரு நாள் உலகக் கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டம் கடந்த நவ. 2 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் திடலில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்றது.

முதல்முறையாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசியின் பரிசுத் தொகையைத் தவிர்த்து பிசிசிஐ சார்பில் ரூ.51 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த வீராங்கனைகளுக்கு மாநில நிர்வாகம் சார்பில் ரொக்கப் பரிசுகளும், கௌரவ விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மேற்கு வங்கத்தின் சிலிகுரியைச் சேர்ந்த 22 வயதான விக்கெட் கீப்பர் பேட்டர் ரிச்சா கோஷை கௌரவப்படுத்தும் விதமாக டிஎஸ்பி பதவி வழங்கப்பட்டது.

மேற்கு வங்க கிரிக்கெட் சங்கத்தின் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சௌரவ் கங்குலி, முதல்வர் மமதா பானர்ஜி தலைமையில் ஈடன் கார்டன் கிரிக்கெட் திடலில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், முன்னாள் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில், ரிச்சா கோஷுக்கு ரூ. 34 லட்சம் பரிசுத் தொகை, வங்க பூஷண் விருது வழங்கி முதல்வர் மமதா பானர்ஜி, அவருக்கு தங்கச் சங்கிலி அணிவித்து, டிஎஸ்பி பணிக்கான நியமனக் கடிதத்தையும் வழங்கினார். மேலும், முதல்வர் மமதா பானர்ஜி மேடையில் பேசுகையில், “ரிச்சாவுக்கு வாழ்த்துகள். அவர் 22 வயதிலேயே உலகச் சாம்பியன் ஆகிவிட்டார்.

சந்த்மோனி பகானில் 27 ஏக்கர் நிலத்தில் ஒரு கிரிக்கெட் திடல் கட்டப்படவுள்ளது. அதற்கு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய மகளிரணி வீராங்கனை ரிச்சா கோஷின் பெயரிடப்படும்” எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள பல்வேறு கிரிக்கெட் திடல்கள் பெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி, அருண் ஜேட்லி, நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் பெயர்களையே கொண்டுள்ளன.

அதேவேளையில், இந்தியாவில் உள்ள கிரிக்கெட் திடல்களின் ஸ்டாண்டுகளுக்கு மட்டுமே கவாஸ்கர், விவிஎஸ் லக்‌ஷ்மண், சச்சின், தோனி, கோலி, சேவாக் போன்ற விளையாட்டு வீரர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

மேற்கு வங்கத்தில் கிரிக்கெட் திடல் கட்டப்பட்டு, அதற்கு ரிச்சா கோஷின் பெயர் சூட்டப்பட்டால், இந்தியாவில் ஒரு வீரர் / வீராங்கனையின் பெயரில் உள்ள முதல் கிரிக்கெட் திடல் என்ற சிறப்பை இந்தத் திடல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, ரிச்சா கோஷ், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, முன்னாள் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி.
டி20 உலகக் கோப்பைக்கு இந்திய அணி தயாராக உள்ளதா? கௌதம் கம்பீர் பதில்!
Summary

West Bengal Chief Minister has announced that New Cricket stadium in Darjeeling will be named after Richa Ghosh.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com