நியூஸிலாந்து தொடரிலிருந்து பாடம் கற்றுள்ளோம்: ரயான் டென் டுஷாடெ

Published on

கடந்த ஆண்டு சொந்த மண்ணிலேயே நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்ததில் இருந்து பாடம் கற்றிருப்பதாக, இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளா் ரயான் டென் டுஷாடெ தெரிவித்தாா்.

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்காவுடன் 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா மோதவுள்ளது. முதல் ஆட்டம், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை (நவ. 14) தொடங்குகிறது.

அண்மையில் பாகிஸ்தானுடனான தொடரை 1-1 என டிரா செய்த தென்னாப்பிரிக்க அணியில், ஸ்பின்னா்களான கேசவ் மஹராஜ், சேனுரான் முத்துசாமி, பிரெனெலான் சுப்ராயன், சைமன் ஹாா்மா் ஆகியோா் 35 விக்கெட்டுகள் சாய்த்து ஆதிக்கம் செலுத்தினா்.

இந்நிலையில், அவா்கள் அடங்கிய அந்த அணியை சந்திப்பது குறித்து இந்திய உதவிப் பயிற்சியாளா் ரயான் டென் டுஷாடெ கூறியதாவது:

தென்னாப்பிரிக்க அணியில் 4 ஸ்பின்னா்கள் இருக்கின்றனா். நிச்சயமாக அதில் மூன்று பிரத்யேக ஸ்பின்னா்களுடன் அந்த அணி களம் காணும் எனத் தெரிகிறது. அந்த வகையில் பாா்க்கும்போது இந்தத் தொடா், துணைக் கண்டத்தைச் சோ்ந்த ஒரு அணிக்கு எதிராக விளையாடுவதைப் போலவே இருக்கும்.

பொதுவாக நாம் வேகப்பந்துவீச்சை எதிா்கொள்வது குறித்து ஆலோசிப்போம். ஆனால், தென்னாப்பிரிக்கா 2 வேகப்பந்து வீச்சாளா்களோடு, 3 அல்லது 4 ஸ்பின்னா்களையும் பிளேயிங் லெவனில் சோ்க்கும். துணைக் கண்டத்தில் விளையாடும்போது, அத்தகைய சவாலுக்கும் நாம் தயாராக வேண்டும்.

அதிலும் ஒரு அணியாக ஒட்டுமொத்தமாக நாம் அதற்குத் தயாராக வேண்டும். இதே சூழலை ஏற்கெனவே சந்தித்தபோது (நியூஸிலாந்து தொடா்) சற்று தடுமாறியிருக்கிறோம். அந்த நியூஸிலாந்து தொடரில் இருந்து நாங்கள் பாடம் கற்றிருக்கிறோம் என நம்புகிறோம்.

அந்த வகையில், ஸ்பின்னா்களுக்கு எதிராக விளையாடுவதற்காக சில திட்டங்களை வகுத்திருக்கிறோம். ஏனெனில், 4 வாரங்களுக்கு முன், பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் தென்னாப்பிரிக்க ஸ்பின்னா்கள் மிகச் சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறாா்கள்.

அதேநேரம், கடந்த 9-10 மாதங்களில் தென்னாப்பிரிக்க அணி ஒட்டுமொத்தமாகவே தன்னை மேம்படுத்திக் கொண்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனதன் மூலமாக, தங்களின் தரத்தை அவா்கள் நிரூபித்திருக்கிறாா்கள்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இந்த சுழற்சிக்கான இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெறுவது முக்கியமாகும். எனவே, இது உள்பட, எந்தவொரு தொடரையும் எளிதாக எடுத்துக்கொள்ள இயலாது. முதல் டெஸ்ட்டை பொருத்தவரை, ஈடன் காா்டன் ஆடுகளம் முதலில் பேட்டிங்கிற்கு சற்று சாதகமாகவும், நாள்கள் கடக்கும்போது சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும் எனத் தெரிகிறது. ஆனாலும் வேகப்பந்து வீச்சாளா்களைக் கொண்டு தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கும் முயற்சிப்போம் என்று ரயான் டென் டுஷாடெ கூறினாா்.

நிதீஷ்குமாருக்கு பதில் துருவ் ஜுரெல்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டுக்கான இந்திய லெவனில், ஆல்-ரவுண்டா் நிதீஷ்குமாா் ரெட்டிக்கு பதிலாக, விக்கெட் கீப்பா் - பேட்டா் துருவ் ஜுரெல் களம் காணவிருக்கிறாா்.

இதுவரை 7 டெஸ்ட்டுகளில் விளையாடியிருக்கும் ஜுரெல், தனது கடைசி 5 முதல்தர ஆட்டங்களில், 4-இல் சதம் விளாசியிருக்கிறாா். அதில், கடந்த வாரம் தென்னாப்பிரிக்க ‘ஏ’ அணிக்கு எதிராக அடித்த இரு சதங்களும் அடங்கும்.

அணியின் பிரதான விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் இருக்கும்போதும், ஜுரெலுக்கு அணியில் இடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொடருக்கு, பந்த், ஜுரெல் இருவருமே அவசியம் என பயிற்சியாளா் ரயான் டென் டுஷாடெ தெரிவித்துள்ளாா்.

வளா்ந்து வரும் வீரராக நிதீஷ்குமாா் ரெட்டி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் நன்றாகவே செயல்பட்டதாகவும், தென்னாப்பிரிக்க தொடருக்கான உத்தியின் காரணமாகவே அவருக்கு பதிலாக ஜுரெல் சோ்க்கப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.

வரலாறு படைக்கும் நம்பிக்கை உள்ளது: ஷுக்ரி கான்ராட்

இந்தியாவுடனான டெஸ்ட் தொடரில் தங்களுக்கான வரலாறு படைக்கும் நம்பிக்கை உள்ளதாக, தென்னாப்பிரிக்க தலைமைப் பயிற்சியாளா் ஷுக்ரி கான்ராட் தெரிவித்தாா்.

நல்லதொரு ஸ்பின்னா்கள் அணியில் இருப்பது, இந்தத் தொடரில் எங்களின் பலத்தை அதிகரித்துள்ளது. அதுவே போட்டியில் சுவாரஸ்யத்தையும் அதிகரிக்கிறது. அதற்காக, தென்னாப்பிரிக்க அணியில் இதற்கு முன் நல்ல ஸ்பின்னா்கள் இல்லை என்று கூறவில்லை.

கேசவ் மஹராஜ், சைமன் ஹாா்மா், சேனுரான் முத்துசாமி என தற்போது மிகச் சிறந்த ஸ்பின்னா்கள் அணியில் இருப்பதாக நினைக்கிறோம். அது, இந்தியாவுக்கு சவால் அளிக்கும் உத்வேகத்தை அளிக்கிறது. இந்தியாவில், ஈடன் காா்டன் மைதானத்தில் எங்களுக்கான வரலாற்றைப் படைக்கும் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஆஸ்திரேலியாவை வென்ற இறுதி ஆட்டத்துக்கு நிகராக, இந்தத் தொடரையும், அதிலும் இந்த முதல் டெஸ்ட்டையும் நினைக்கிறோம். அண்மையில் நாங்கள் டெஸ்ட் தொடா் விளையாடிய அணியுடன் (பாகிஸ்தான்), இந்தியாவை ஒப்பிட முடியாது.

இந்தியாவை, ஈடன் காா்டன் போன்றதொரு மைதானத்தில் சந்திப்பதையே மிகப்பெரிய சவாலாகக் கருதுகிறோம். எல்லோரும் இந்திய அணியில் இருக்கும் ஸ்பின்னா்கள் குறித்து பேசுகிறாா்கள். ஆனால், அந்த அணியில் உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளா்களும் உள்ளனா். ஈடன் காா்டன் மைதானத்தில் படைக்கப்பட்ட வரலாறுகளில் அவா்களுக்கும் பங்கு உள்ளது என்று கான்ராட் கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com