

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி, முதல் இன்னிங்ஸில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 37 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல்.ராகுல் 13 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (நவம்பர் 15) தொடங்கியது.
இந்திய அணி அதன் முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், தென்னாப்பிரிக்காவைக் காட்டிலும் இந்திய அணி 30 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 29 ரன்களும் எடுத்தனர்.
ரவீந்திர ஜடேஜா சாதனை
இந்தியாவைக் காட்டிலும் 30 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென்னாப்பிரிக்க அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.
இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. 91 ரன்களுக்கு அந்த அணி 7 விக்கெட்டுகளை இழந்தது.
இந்தியா தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் இந்திய மண்ணில் 250-க்கும் அதிகமான விக்கெட்டுகளைக் கைப்பற்றிய 4-வது வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். அதேபோல, இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டூவர்ட் பிராடுக்குப் பிறகு, டெஸ்ட் போட்டிகளில் சொந்த மண்ணில் 2000 ரன்கள் மற்றும் 250 விக்கெட்டுகள் கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் 250+ விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்
ரவிச்சந்திரன் அஸ்வின் - 383 விக்கெட்டுகள்
அனில் கும்ப்ளே - 350 விக்கெட்டுகள்
ஹர்பஜன் சிங் - 265 விக்கெட்டுகள்
ரவீந்திர ஜடேஜா - 250* விக்கெட்டுகள்
இதையும் படிக்க: ஆஷஸ் தொடரின் முதல் போட்டியிலிருந்து ஜோஷ் ஹேசில்வுட் விலகல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.