

சாம்சன், ஜடேஜா மாற்றம் குறித்து சிஎஸ்கேவின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் விடியோ வெளியிட்டு பேசியுள்ளார்.
இந்த விடியோவில் சிஎஸ்கே எடுத்ததிலேயே மிகவும் கடினமான முடிவு இது எனக் கூறியுள்ளார்.
2011 முதல் சிஎஸ்கே அணியின் அங்கமாக இருக்கும் ஜடேஜா ஆல் ரவுண்டராக இருந்து வருகிறார்.
2023 ஐபிஎல் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர். அவருடன் சேர்த்து சாம் கரணையும் அணியில் இருந்து விற்று, அதற்குப் பதிலாக சஞ்சு சாம்சனை எடுத்துள்ளார்கள்.
இந்த முடிவுக்கு சில சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் இந்த முடிவு எடுத்தது ஏன் எனக் கூறியுள்ளார்.
சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட விடியோவில் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் பேசியிருப்பதாவது:
கடினமான முடிவு...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்து சஞ்சு சாம்சனை வாங்க, நமது அணியில் இருந்து ஜடேஜா, சாம் கரண் விற்கப்பட்டுள்ளனர். ஒரு அணியாக கடந்த காலங்களில் இந்த மாதிரி டிரேடிங்கில் நாம் பங்கேற்றதில்லை. ஒரேயொரு முறை மட்டுமே ராபின் உத்தப்பாவை வாங்கினோம்.
சிஎஸ்கே அணிக்கு இந்திய டாப் ஆர்டர் யாராவது இருந்தால் நல்லது என நினைத்தோம். அதேவேளையில், மினி ஏலத்தில் அப்படியான வீரர்கள் இல்லாததால், இந்த டிரேடிங் முறையை பயன்படுத்தினோம். இந்த முடிவை அணி நிர்வாகம் எடுத்தது.
சிஎஸ்கேவின் வெற்றிக்கு இவ்வளவு காலம் காரணமாக இருந்த ஜட்டுவை (ஜடேஜா) விற்பது மிகவும் கடினமான முடிவாகும். சிஎஸ்கே எடுத்திலேயே மிகவும் கடினமான முடிவாக இதுவே இருக்கிறது.
சிஎஸ்கேவின் வருங்காலம் முக்கியம்...
இந்த நேரத்தில் சிஎஸ்கே மாற்றங்கள் தேவைப்படும் காலகட்டதில் இருப்பதால், நிர்வாகம் கடினமான முடிவை எடுத்துள்ளது.
இருப்பினும் இது முழுக்க முழுக்க வீரர்களின் ஒப்புதலோடு எடுக்கப்பட்ட முடிவாகும். நான் இது குறித்து ஜடேஜாவிடம் பேசினேன். அவரும் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டின் கடைசி கால கட்டத்தில் இருக்கிறார். சிஎஸ்கேவில் பலரும் கடைசி கட்ட காலத்தில் இருக்கிறார்கள். அதனால், இரண்டாண்டுகளில் அணியை கட்டமைக்க வேண்டும்.
ரசிகர்கள் பலரும் வருத்தமுடன் இருப்பது தெரியும். இருந்தும் இந்த முடிவை எடுத்தாக வேண்டிய கட்டாயம் அணிக்கு இருக்கிறது. வருங்காலத்தில் சிஎஸ்கே இதே மாதிரி தொடர்ச்சியான நல்ல கிரிக்கெட்டை தரும் எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.