

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 93 ரன்களுக்கு ஆட்டமிழந்து, 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த நிலையில், முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் விளையாட முடியாத அளவுக்கு கடினமான ஆடுகளம் இல்லை எனவும், இந்த மாதிரியான ஆடுகளத்தையே இந்திய அணி கேட்டதாகவும் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு கௌதம் கம்பீர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது: முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் விளையாட முடியாத அளவுக்கு கடினமான ஆடுகளம் கிடையாது. இந்த மாதிரியான ஆடுகளத்தையே நாங்கள் திடல் பராமரிப்பாளரிடம் கேட்டோம். அவர் எங்களுக்கு மிகுந்த ஆதரவாக இருந்தார். இந்த ஆடுகளம் வீரர்களின் மன உறுதியை சோதிக்கும் விதமாக இருந்தது. நன்றாக தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய வீரர்கள் இந்த ஆடுகளத்தில் ரன்கள் குவித்துள்ளனர்.
நாங்கள் இந்த மாதிரியான ஆடுகளத்தையே எதிர்பார்த்தோம். இந்த ஆடுகளம் விளையாடுவதற்கு மிகவும் கடினமான ஆடுகளம் என்று கூற முடியாது. அக்ஷர் படேல், டெம்பா பவுமா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்த ஆடுகளத்தில் நன்றாக விளையாடி ரன்கள் எடுத்துள்ளனர். ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதமானது என்று யாரேனும் கூறினால், முதல் போட்டியில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியது வேகப் பந்துவீச்சாளர்கள் என்பதைக் கூறிக் கொள்கிறேன்.
சுழற்பந்துவீச்சுக்கு ஆடுகளம் உதவும் விதமாக இருக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக் கொண்டோம். அதனால், எந்த அணி டாஸ் வெல்கிறது என்பது முக்கியமான விஷயமாக இருக்கவில்லை. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றிருந்தால், ஆடுகளம் குறித்து இத்தனை கேள்விகள் இருந்திருக்காது. எந்த ஒரு ஆடுகளத்திலும், எந்த ஒரு சூழலிலும் விளையாடுவதற்கு எங்களிடம் வீரர்கள் இருக்கிறார்கள் என்றார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குகிறது.
இதையும் படிக்க: நாங்கள் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியிருக்க வேண்டும்: ரிஷப் பந்த்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.