

அணியில் யார் விளையாடாவிட்டாலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியாவில் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலையில், அணியில் யார் விளையாடாவிட்டாலும் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெறும் என அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: தென்னாப்பிரிக்க அணியில் எந்த ஒரு வீரர் விளையாடாமல் வெளியில் அமர்ந்திருந்தாலும், எங்களால் வெற்றி பெறுவதற்கான வழியை கண்டுபிடிக்க முடியும். கேப்டன் டெம்பா பவுமா எங்களுக்கு மிகவும் முக்கியமானவர். ஆனால், அவர் அனைத்துப் போட்டிகளிலும் விளையாடுவதில்லை. இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியில் நான் விளையாடவில்லை. பிளேயிங் லெவனில் எந்த ஒரு வீரர் இடம்பெற முடியாத சூழல் உருவானாலும், தென்னாப்பிரிக்க அணியால் வெற்றி பெற முடியும் என்பதை நம்புகிறோம்.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் எங்களுக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. அய்டன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கல்டான் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். முக்கியமான தருணங்களில் மார்கோ யான்சென் மற்றும் கார்பின் போஸ்ச் சிறப்பாக செயல்பட்டனர். அணியில் உள்ள அனைவரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கினர் என்றார்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற நவம்பர் 22 ஆம் தேதி குவாஹாட்டியில் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.