

ஆஷஸ் டெஸ்ட் தொடர் தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் அறிவுரை வழங்கியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 21 ஆம் தேதி தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் போட்டி பெர்த்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில், வேகமாக பந்துவீசுவது மட்டும் ஆஸ்திரேலியாவில் வெற்றியை பெற்றுத் தராது என இங்கிலாந்து அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இங்கிலாந்து வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த இரண்டு முறை ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோதும், பந்துவீச்சின்போது, ஆடுகளத்தில் நகர்வு இருப்பதை பார்த்துள்ளோம். அதனால், பந்துவீச்சில் வேகம் மட்டுமின்றி துல்லியத்தன்மையும் மிகவும் முக்கியம். இங்கிலாந்து அணியில் வேகம் மற்றும் துல்லியத்தன்மையுடன் பந்துவீசும் திறன் பென் ஸ்டோக்ஸிடம் இருப்பதாக நினைக்கிறேன். ஆனால், அடிக்கடி காயம் ஏற்படுவது அவரிடம் இருக்கும் பிரச்னையாக உள்ளது.
வேகம் மற்றும் பௌன்சர்களுக்கு சாதகமான ஆடுகளமான பெர்த்தில் இங்கிலாந்து அணி ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட்டுடன் களமிறங்கினால், சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி தொடரை வெற்றியுடன் தொடங்க வேண்டும். அதன் பின், அடுத்தடுத்தப் போட்டிகளில் இவர்கள் இருவரில் ஒருவர் அணியில் இடம்பெறுமாறு பிளேயிங் லெவனை தேர்வு செய்யலாம். அணியில் பிரைடான் கார்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் போன்ற வேகப் பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரைக் கைப்பற்ற வேண்டுமானால், இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு மிகவும் வலுவாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால், ஆஷஸ் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றிவிடும் என உறுதியாகக் கூற முடியாது. ஆஸ்திரேலிய அணி அவர்களது சொந்த மண்ணில் மிகவும் சிறப்பாக விளையாடக் கூடியவர்கள். கேப்டன் பாட் கம்மின்ஸ் அணியில் இல்லாவிட்டாலும், ஆஸ்திரேலிய அணி சிறப்பாக செயல்படும் என்றார்.
இதையும் படிக்க: இந்தியா - வங்கதேசம் இடையேயான ஒருநாள், டி20 தொடர்கள் ஒத்திவைப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.