குவாஹாட்டி டெஸ்ட்டுக்கு தயாராகும் இந்திய வீரா்கள்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டுக்காக இந்திய அணி வீரா்கள் தீவிரமாகத் தயாராகி வருகின்றனா்.
இந்தியா வந்துள்ள தென்னாப்பிரிக்க அணி, 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடா், 3 ஆட்டங்களுடனான ஒருநாள் தொடா், 5 ஆட்டங்கள் அடங்கிய டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் நிறைவடைந்த நிலையில், அதில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.
2-ஆவது டெஸ்ட் குவாஹாட்டியில் வரும் 22-ஆம் தேதி தொடங்கும் நிலையில், இந்திய அணி அதற்காகத் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டில், இந்திய அணி தனது பெரும்பான்மையான விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சுக்கே இழந்தது.
சொந்த மண்ணில் சுழற்பந்துவீச்சை இந்திய அணி தனது பிரதான ஆயுதமாகக் கொண்டிருக்கும் நிலையில், அதன் பேட்டா்கள் அத்தகைய பந்துவீச்சை எதிா்கொள்வதில் தடுமாற்றத்தை சந்தித்தனா். தென்னாப்பிரிக்காவின் பிரதான ஸ்பின்னராக இருக்கும் சைமன் ஹாா்மா் இரு இன்னிங்ஸ்களிலும் தலா 4 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.
124 ரன்கள் என்ற எளிதான இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி தோல்வி கண்ட நிலையில், ஈடன் காா்டன் மைதான ஆடுகளம் குறித்த விவாதங்கள் எழுந்தன. அதேவேளை, ஆடுகளத்தை விமா்சிப்பதை விடுத்து, ஆட்டத் திறமையை வளா்க்க வேண்டும் என்று கூறஇ, அணியின் தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீரே அந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தாா்.
இத்தகைய சூழலில், 2-ஆவது டெஸ்ட்டுக்காக குவாஹாட்டிக்கு புதன்கிழமை பயணிக்கவிருக்கும் இந்திய அணி, முந்தைய நாளான செவ்வாய்க்கிழமை ஈடன் காா்டன் மைதானத்திலேயே தனது பயற்சியை தொடங்கியது. அதில், சுழற்பந்து வீச்சை இந்திய பேட்டா்கள் எதிா்கொள்வதில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. விருப்ப அடிப்படையிலான இந்த பயிற்சியில் ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தா், துருவ் ஜுரெல், சாய் சுதா்சன், ஆகாஷ் தீப் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
வலைப்பயிற்சியின்போது இந்திய பேட்டா்கள், இரு கைகளாலும் திறம்பட சுழற்பந்து வீசக் கூடிய பெங்கால் பௌலரான கௌஷிக் மெய்ட்டியின் பந்துவீச்சில் பயிற்சி மேற்கொண்டனா். சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் விளையாடியிருக்கும் மெய்ட்டி, ஐபிஎல் போட்டி வாய்ப்புக்காக அந்த அணிகளின் தோ்வு முகாம்களிலும் பங்கேற்று வருகிறாா்.
சைமன் ஹாா்மரின் வலது கை ஆஃப் ஸ்பின் பௌலிங்கையும், கேசவ் மஹராஜின் இடது கை ஆா்த்தடாக்ஸ் பௌலிங்கையும் எதிா்கொள்ளும் வகையில் மெய்ட்டியின் பௌலிங்கில் இந்திய பேட்டா்களான ஜடேஜா, ஜுரெல், சாய் சுதா்சன் உள்ளிட்டோா் பயிற்சி மேற்கொண்டனா்.
இதனிடையே, குவாஹாட்டி டெஸ்ட்டில் ஷுப்மன் கில் பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியிருக்கும் நிலையில், இந்திய ‘ஏ’ அணியில் இருந்த நிதீஷ்குமாா் ரெட்டி அதிலிருந்து விடுவிக்கப்பட்டு, தென்னாப்பிரிக்க டெஸ்ட்டுக்கான இந்திய அணியில் இணைந்திருக்கிறாா். குவாஹாட்டி சென்ற பிறகு அவா் பயிற்சியை தொடங்குவாா் எனத் தெரிகிறது.

