

ஆடவர்களுக்கான ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை அரையிறுதிப் போட்டியில் சூப்பர் ஓவரில் இந்தியா ஏ அணியை வீழ்த்தி வங்கதேசம் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
ஆடவருக்கான ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியா ஏ மற்றும் வங்கதேசம் ஏ அணிகளுக்கு இடையேயான அரையிறுதிப் போட்டி தோஹாவில் உள்ள வெஸ்ட் எண்ட் பார்க் திடலில் இன்று (நவம்பர் 21) நடைபெற்றது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, வங்கதேசம் முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மான் சோஹன் 46 பந்துகளில் 65 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, அதிரடியில் மிரட்டிய மெஹராப் 18 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும்.
இந்தியா தரப்பில் குர்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹர்ஷ் துபே, சூயாஷ் சர்மா, ரமன்தீப் சிங் மற்றும் நமன் திர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
சூப்பர் ஓவரில் வீழ்ந்த இந்திய அணி
195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்து ஸ்கோரை சமன் செய்தது.
இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்கள் பிரியன்ஷ் ஆர்யா 44 ரன்களும், வைபவ் சூர்யவன்ஷி 38 ரன்களும் எடுத்தனர். கேப்டன் ஜித்தேஷ் சர்மா 33 ரன்களும், நேஹல் வதேரா 32 ரன்களும் எடுத்தனர்.
ஸ்கோர் சமனில் முடிந்ததால் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இரண்டு பந்துகளில் ரன்கள் எடுக்காமல் விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சியளித்தது. கேப்டன் ஜித்தேஷ் சர்மா முதல் பந்திலும், அஷுட்டோஷ் சர்மா இரண்டாவது பந்திலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் சூப்பர் ஓவரில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற மிகவும் எளிய இலக்கு வங்கதேச அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. சூப்பர் ஓவரின் முதல் பந்தில் வங்கதேச அணியும் விக்கெட்டினை இழந்தது. இருப்பினும், இரண்டாவது பந்து அகலப் பந்தாக வீசப்பட வங்கதேச அணி இந்தியாவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
நாளை மறுநாள் (நவம்பர் 23) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் வங்கதேச அணி, பாகிஸ்தான் ஏ அல்லது இலங்கை ஏ அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஆஷஸ் டெஸ்ட் தொடரைப் பார்த்து பொறாமையாக இருக்கிறது: டெம்பா பவுமா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.