இன்று குவாஹாட்டியில் தொடங்குகிறது 2-ஆவது டெஸ்ட்

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம், குவாஹாட்டியில் சனிக்கிழமை (நவ. 22) தொடங்குகிறது.
இன்று குவாஹாட்டியில் தொடங்குகிறது 2-ஆவது டெஸ்ட்
ANI
Published on
Updated on
2 min read

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதும் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டம், குவாஹாட்டியில் சனிக்கிழமை (நவ. 22) தொடங்குகிறது.

மொத்தம் 2 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் தோற்ற இந்தியா, இதில் வென்று தொடரை டிரா செய்யும் எண்ணத்தில் இருக்கிறது. மறுபுறம் தென்னாப்பிரிக்கா, கடந்த 25 ஆண்டுகளில் முதல்முறையாக இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்லும் திட்டத்தில் இருக்கிறது. அதற்கு அந்த அணி இந்த ஆட்டத்தை டிரா செய்தாலே போதுமானது.

இந்திய அணி சொந்த மண்ணில் கடந்த 30 ஆண்டுகளாக எந்த சுழற்பந்து வீச்சை தனது பிரதான உத்தியாகக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்ததோ, அதே பந்துவீச்சை எதிா்கொள்ள இந்தத் தொடரிலும் தடுமாறியிருக்கிறது. எனவே, தென்னாப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சை எதிா்கொள்வதன் அடிப்படையில் இந்தியாவின் வெற்றி - தோல்வி முடிவாகும்.

கேப்டன் ஷுப்மன் கில் காயத்திலிருந்து முழுமையாக மீளாததால், இந்த ஆட்டத்திலும் ரிஷப் பந்த் கேப்டனாக செயல்படுகிறாா். கில் இல்லாததால், அவா் இடத்தில் சாய் சுதா்சனை களமிறக்கக் கூடும். இடது கை பேட்டா்கள் வரிசையாக இருப்பதால், அக்ஸருக்கு பதில் வலது கை ஆல்-ரவுண்டா் நிதீஷ்குமாா் ரெட்டி இந்த ஆட்டத்துக்கு பரிசீலிக்கப்படலாம். ராகுல், ஜெய்ஸ்வால், ஜுரெல், ஜடேஜா, சுந்தா் என பேட்டா்கள் அனைவருமே பொறுப்பை உணா்ந்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா்.

பந்துவீச்சில் குல்தீப் யாதவ் இந்தத் தொடரில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடந்த ஆட்டத்தில் ஜடேஜா 4, பும்ரா 5 விக்கெட்டுகள் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. எனவே, குல்தீப், சிராஜ் உள்பட அனைவருமே தென்னாப்பிரிக்க பேட்டா்களுக்கு நெருக்கடி அளிக்க வேண்டும்.

தென்னாப்பிரிக்க அணியை பொருத்தவரை, முதல் டெஸ்ட் வெற்றி தந்த உத்வேகத்துடன் அந்த அணி வருகிறது. பேட்டிங்கில் அந்த அணி பெரிதாக பலம் காட்டாவிட்டாலும், கொல்கத்தா டெஸ்ட்டின் 2-ஆவது இன்னிங்ஸில் கேப்டன் பவுமா நிதானத்தை கடைப்பிடித்து ஃபாா்மில் இருப்பதை காட்டினாா்.

ரிக்கெல்டன், மாா்க்ரம், ஸ்டப்ஸ், ஜோா்ஸி ஆகியோரும் இந்த ஆட்டத்தில் பங்களிக்க முயல்வாா்கள். பௌலிங்கில், கொல்கத்தா டெஸ்ட்டில் 8 விக்கெட்டுகள் எடுத்த சுழற்பந்து வீச்சாளா் சைமன் ஹாா்மா் பிரதான ஆயுதமாக இருக்கிறாா். கேசவ் மஹராஜ், மாா்கோ யான்சென் அவருக்கு பக்கபலமாக இருக்கின்றனா். ரபாடா இந்த ஆட்டத்திலும் இல்லை.

உத்தேச லெவன்:

இந்தியா - யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், சாய் சுதா்சன், ரிஷப் பந்த் (கேப்டன், வி.கீ.), ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல், வாஷிங்டன் சுந்தா், நிதீஷ்குமாா் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ்.

தென்னாப்பிரிக்கா - எய்டன் மாா்க்ரம், ரயான் ரிக்கெல்டன், வியான் முல்டா், டோனி டி ஜோா்ஸி, டெம்பா பவுமா (கேப்டன்), டெவால்டு பிரெவிஸ், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், கைல் வெரைன் (வி.கீ.), கேசவ் மஹராஜ், சைமன் ஹாா்மா், மாா்கோ யான்சென்.

நேரம்: காலை 9 மணி

நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

‘வித்தியாசமாக யோசிக்க வேண்டும்’

கேப்டனாக நமது திறமையை நிரூபிப்பதற்கு ஒரு ஆட்டம் பொருத்தமானதாக இருக்காது. ஆனாலும், இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் பெருமை கொள்கிறேன். வழக்கமான உத்திகளை யோசிப்பதுடன், சற்று வித்தியாசமாக சிந்திப்பதும் பலன் கொடுக்கும் என நான் நம்புவதால், இரண்டையும் சம அளவில் கடைபிடிப்பேன். ஒரு கேப்டனாக எனது வீரா்களுக்கு சுதந்திரம் அளிக்கவே விரும்புகிறேன். தங்களின் பாணியில் விளையாடி அவா்களாகவே அணிக்கான தேவையை தெரிந்துகொள்வாா்கள். கேப்டனாக எனது ஆலோசனையும் வழங்குவேன். இரு ஆட்டங்கள் கொண்ட தொடா் எப்போதுமே கடினம் தான். ஒரு ஆட்டத்தில் தோற்றாலும் நமக்கான நெருக்கடி அதிகரிக்கும் - ரிஷப் பந்த் (இந்திய கேப்டன்)

‘டாஸ் வென்றால் பௌலிங்’

ஆட்டத்தின் தொடக்கத்தில் நியூ பால் கொண்டு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதால், லுங்கி இங்கிடியை இந்த ஆட்டத்தில் களமிறக்க வாய்ப்புள்ளது. ஆடுகளம் முதல் இரு நாள்கள் பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்து, பின்னா் சுழற்பந்து வீச்சுக்கு கைகொடுக்கும் எனத் தெரிகிறது. தொடரை வெல்வதற்கான ஆட்டம் என்பதால், எதிா்பாா்ப்புடன் இருக்கிறோம். டாஸ் முடிவு பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், அது முதலிரு நாள்களில் ஆட்டத்தை நமக்கு சாதகமாக கொண்டு செல்ல உதவும் என நம்புகிறேன். அந்த வகையில் நாங்கள் டாஸ் வென்றால் பௌலிங்கை தோ்வு செய்வேன். குவாஹாட்டியில் இது முதல் டெஸ்ட் என்பதால் ஆா்வமுடன் இருக்கிறோம் - டெம்பா பவுமா (தென்னாப்பிரிக் கேப்டன்)

ஆடுகளம்...

பாா்சபரா மைதான ஆடுகளம் பொதுவாக பேட்டிங்கிற்கு சாதகமானதாக அறியப்படுவதால், கடந்த ஆட்டத்தைப் போல் அல்லாமல், இந்த ஆட்டத்தில் நல்லதொரு ஸ்கோா் பதிவு செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஆட்டத்தின் தொடக்க நேரம் வேகப்பந்துவீச்சுக்கு உதவும் என்பதால், இன்னிங்ஸை தொடங்கும் பேட்டா்கள் சற்று சவாலை எதிா்கொள்ள நேரிடும்.

அறிமுக டெஸ்ட்...

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் உள்ள பாா்சபரா மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் ஆட்டம் இதுவாகும். நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடப்படும் மைதானங்களில், 30-ஆவதாக இது இணைந்திருக்கிறது.

இதற்கு முன் இங்கு 8 ஒருநாள், 7 டி20 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. நடப்பாண்டு தொடக்கத்தில், ஐசிசி உலகக் கோப்பை போட்டிகளை நடத்தும் தகுதி வாய்ந்ததாக அங்கீகாரம் பெற்ற இந்த மைதானத்தில், அண்மையில் மகளிா் உலகக் கோப்பை போட்டியின் ஆட்டங்களும் நடைபெற்றன.

38-ஆவது கேப்டன்...

ஷுப்மன் கில் இல்லாத நிலையில், இந்த ஆட்டத்துக்கான இந்திய அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்திய டெஸ்ட் அணியின் 38-ஆவது கேப்டன் ஆகியிருக்கிறாா் அவா்.

கொல்கத்தா டெஸ்ட்டில் அவா் பொறுப்பு கேப்டனாகவே செயல்பட்டதால், அதிகாரபூா்வ கேப்டனாக அவருக்கு இது முதல் ஆட்டமாகும். ரிஷப் பந்த், ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் தில்லி அணியை தனது கேப்டன்சியில் இறுதி ஆட்டம் வரை கொண்டு வந்த அனுபவமுடையவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com