

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஸாக் கிராலி டக் அவுட் ஆகியுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு 205 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளதையடுத்து, வெற்றி இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
மோசமான சாதனைப் பட்டியலில் ஸாக் கிராலி
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸாக் கிராலி முதல் இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க்கின் முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவைக் காட்டிலும் 40 ரன்கள் முன்னிலை பெற்றதால், இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக விளையாடி முன்னிலையை அதிகப்படுத்தும் வாய்ப்பு இங்கிலாந்து அணிக்கு சிறப்பாக இருந்தது.
முதல் இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் டக் அவுட்டான ஸாக் கிராலி, இரண்டாவது இன்னிங்ஸில் நன்றாக விளையாடி ரன்கள் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு முறை ஸ்டார்க் பந்துவீச்சில் முதல் ஓவரிலேயே அவர் டக் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். மிட்செல் ஸ்டார்க் அற்புதமான கேட்ச் மூலம் ஸாக் கிராலியை ஆட்டமிழக்கச் செய்தார்.
ஆஷஸ் தொடரின் முதல் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆனதன் மூலம், ஆஷஸ் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆன இங்கிலாந்து அணியின் நான்காவது தொடக்க ஆட்டக்காரர் என்ற மோசமான சாதனையை ஸாக் கிராலி படைத்துள்ளார்.
இதற்கு முன்பாக, இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான டிரெவர் பெய்லி (1959, மெல்போர்னில்), டெனிஸ் அமிஸ் (1975, அடிலெய்டில்), மைக்கேல் ஏதெர்டான் (1998, மெல்போர்னில்) ஆஷஸ் டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகியுள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஸாக் கிராலி நான்காவது வீரராக இணைந்துள்ளார்.
இந்த ஆண்டு 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஸாக் கிராலி, 34.50 சராசரியுடன் 414 ரன்கள் எடுத்துள்ளார். அதில் ஒரு சதம் மற்றும் 3 அரைசதங்கள் அடங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.