

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் இன்று (நவம்பர் 22) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான அய்டன் மார்க்ரம் மற்றும் ரியான் ரிக்கல்டான் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். மார்க்ரம் 38 ரன்களிலும், ரிக்கல்டான் 35 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின், ஜோடி சேர்ந்த கேப்டன் டெம்பா பவுமா மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 49 ரன்களும், டெம்பா பவுமா 41 ரன்களும் எடுத்தனர். டோனி டி ஸார்ஸி 28 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
செனுரான் முத்துசாமி 25 ரன்களுடனும், கைல் வெரைன் ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.