

இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் தந்தையைத் தொடர்ந்து, அவரது மணமகனும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிரத்தை சேர்ந்த 29 வயதான ஸ்மிருந்தி மந்தனா, பிரபல ஹிந்தி இசையமைப்பாளரான மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பலாஷ் முச்சலை நீண்ட காலமாக காதலித்து வருகிறார். பலாஷ் முச்சலுடன் மோதிரம் மாற்றி நிச்சயம் செய்துகொண்டதை விடியோ வெளியிட்டு ஸ்மிருதி மந்தனா அண்மையில் உறுதிபடுத்தியிருந்தார்.
இவர்கள் இருவருக்கும் நேற்றுறு(நவ. 23) திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சாங்லியின் சாம்டோலில் உள்ள மந்தனா பண்ணை வீட்டில் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது, ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், திருமணத்தை ஒத்திவைப்பதாக குடும்பத்தினர் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பலாஷ் முச்சலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலாஷ் முச்சலின் உடல்நிலை குறித்து அவரது தாயார் ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில், “ஸ்மிருதியைவிட அவரது தந்தையுடன் பலாஷ் மிகவும் நெருக்கமும் அன்பும் கொண்டவர். அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டவுடன், அவர் குணமடையும்வரை திருமணத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று பலாஷ்தான் முடிவெடுத்தார்.
தொடர்ந்து அழுததால் திடீரென பலாஷுக்கு உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிரிப்ஸ் போடப்பட்டது. இசிஜி உள்ளிட்ட பிற சோதனைகளும் செய்யப்பட்டன. அவர் உடல்நிலைக்கு பிரச்னை இல்லை. ஆனால், மிகவும் மன அழுத்தத்தில் இருக்கிறார்” எனத் தெரிவித்தார்.
ஸ்மிருதி மந்தனாவின் தந்தை நிலை?
ஸ்மிருதி மந்தனாவின் தந்தை அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் இயக்குநர் வெளியிட்ட தகவலில், ”திருமண ஏற்பாட்டால் உடல் அல்லது மன அழுத்தம் காரணமாக மாரடைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஸ்மிருதியின் தந்தை உடல்நிலை முன்னேற்றம் அடைந்து தற்போது அவர் நலமுடன் இருப்பதாக பலாஷின் தாயார் தெரிவித்துள்ளார்.
”திருமணத்துக்கு முந்தைய நாள் மிகவும் மகிழ்ச்சியுடன் நீண்ட நேரம் ஸ்மிருதியின் தந்தை நடனமாடிக் கொண்டிருந்தார். இன்ஸ்டாகிராமில்கூட பதிவிட்டார். திருமண ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அவருக்கு உடல் அசெளகரியம் ஏற்பட்டுள்ளது.
முதலில் அவர் யாரிடமும் எதுவும் தெரிவிக்கவில்லை. பின்னர் உடல்நிலை மோசமடைந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.