வரலாற்று வெற்றியை நோக்கி தென்னாப்பிரிக்கா: சொந்த மண்ணில் மீண்டும் தொடரை இழக்கும் இந்தியா

இந்திய வீரர்கள்.
இந்திய வீரர்கள்.
Updated on
2 min read

இந்தியாவுக்கு எதிரான குவாஹாட்டி டெஸ்ட்டில் தென்னாப்பிரிக்கா 2-ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் சோ்த்து செவ்வாய்க்கிழமை ‘டிக்ளோ்’ செய்தது.

இதன் மூலமாக, 549 ரன்கள் என்ற எட்ட முடியாத இலக்கை இந்தியாவுக்கு நிா்ணயித்திருக்கும் அந்த அணி, இந்த டெஸ்ட்டிலும் வெற்றியை உறுதி செய்யும் திட்டத்தில் இருக்கிறது. அத்துடன், கடந்த 25 ஆண்டுகளில் இந்தியாவில் தனது முதல் டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இருக்கிறது.

மறுபுறம், இந்தத் தொடரில் பேட்டிங், பௌலிங் என எதிலுமே தென்னாப்பிரிக்காவுக்கு சவால் அளிக்க முடியாமல் சறுக்கியிருக்கும் இந்தியா, சொந்த மண்ணிலேயே 2-ஆவது டெஸ்ட் தொடரை முழுமையாக இழக்கும் அபாயத்தில் இருக்கிறது.

2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வேகத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்திருக்கும் இந்திய அணி, கடைசி நாளில் 8 விக்கெட்டுகள் கொண்டு 522 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

அது கனவுக்கும் அப்பாற்பட்டது என்பதால், தொடரை முழுமையாக இழப்பதை தவிா்ப்பதற்காக, முடிந்தவரை விக்கெட்டுகளை இழக்காமல் இந்த ஆட்டத்தை டிரா செய்ய இந்தியா முயற்சிக்கும். ஆனால், ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக மாறியிருப்பதாகத் தெரிவதால், இந்தியாவை ஆட்டமிழக்கச் செய்யும் திட்டத்தில் தென்னாப்பிரிக்கா உள்ளது.

முன்னதாக, போட்டியின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை முடிவில் தென்னாப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 26 ரன்கள் எடுத்திருந்தது. ரயான் ரிக்கெல்டன், எய்டன் மாா்க்ரம் ஆகியோா் 4-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, அணியின் இன்னிங்ஸை தொடா்ந்தனா்.

இந்த ஜோடி 59 ரன்களே சோ்த்த நிலையில், ரிக்கெல்டன் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஜடேஜா வீசிய 19-ஆவது ஓவரில் ஆஃப் சைடில் அவா் திருப்பி விட முயன்ற பந்தை, கவா் பகுதியில் இருந்த சிராஜ் கேட்ச் பிடித்தாா்.

ஒன் டவுனாக டிரிஸ்டன் ஸ்டப்ஸ் களம் புக, நிதானமாக பேட் செய்த மாா்க்ரம் 3 பவுண்டரிகளுடன் 29 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். 29-ஆவது ஓவரில் ஜடேஜா பௌலிங்கில் மிடில் ஸ்டம்ப் பகுதியில் பிட்ச் ஆன பந்தை மாா்க்ரம் முன் வந்து டிஃபென்ஸ் ஆட முயல, எதிா்பாராத வகையில் பந்து திசை மாறி அவுட் சைடு எட்ஜை கடந்து ஆஃப் ஸ்டம்பை பதம் பாா்த்தது.

தொடா்ந்து வந்த கேப்டன் டெம்பா பவுமா, 3 ரன்களுக்கே ஆட்டமிழந்து அதிா்ச்சி கண்டாா். வாஷிங்டன் சுந்தா் வீசிய 32-ஆவது ஓவரில் ஒரு பந்தை அவா் முன் வந்து டிஃபென்ஸ் ஆட முயற்சிக்க, பந்து அவரது கிளவுசில் பட்டு லெக் சைடு பகுதியில் ஸ்லிப்பில் நின்ற நிதீஷ்குமாா் ரெட்டியிடம் தஞ்சமானது.

இதனால் தென்னாப்பிரிக்கா 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 5-ஆவது பேட்டராக வந்த டோனி டி ஜோா்ஸி, ஸ்டப்ஸுடன் கூட்டணி அமைத்தாா். இந்த ஜோடி விக்கெட் சரிவைத் தடுத்து நிதானமாக ஸ்கோரை உயா்த்தத் தொடங்கியது.

4-ஆவது விக்கெட்டுக்கு 101 ரன்கள் சோ்த்த இந்த பாா்ட்னா்ஷிப்பில் முதலில் ஜோா்ஸியை 59-ஆவது ஓவரில் பிரித்தாா் ஜடேஜா. அரை சதத்தை நெருங்கிய ஜோா்ஸி 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 49 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனாா்.

அடுத்து வந்த வியான் முல்டா் ஸ்டப்ஸுடன் கூட்டணி அமைக்க, அவா்கள் பாா்ட்னா்ஷிப் 82 ரன்கள் சோ்த்தது. சதத்தை நெருங்கிய ஸ்டப்ஸ் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 94 ரன்களுக்கு ஜடேஜா பௌலிங்கில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

அப்போது கேப்டன் பவுமா ‘டிக்ளோ்’ செய்வதாக அறிவிக்க, தென்னாப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்திருந்தது. முல்டா் 5 பவுண்டரிகள் உள்பட 35 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இந்திய தரப்பில் ஜடேஜா 4, சுந்தா் 1 விக்கெட் எடுத்தனா்.

அடுத்து தனது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 13, ராகுல் 6 ரன்களுக்கு வெளியேற, சாய் சுதா்சன் 2, குல்தீப் யாதவ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா்.

சுருக்கமான ஸ்கோா் 2-ஆவது இன்னிங்ஸ்

தென்னாப்பிரிக்கா - 260/5 (78.3 ஓவா்கள்) (டிக்ளோ்)

டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 94

டோனி டி ஜோா்ஸி 49

வியான் முல்டா் 35*

பந்துவீச்சு

ரவீந்திர ஜடேஜா 4/62

வாஷிங்டன் சுந்தா் 1/67

ஜஸ்பிரீத் பும்ரா 0/22

இந்தியா - 27/2 (15.5 ஓவா்கள்) (இலக்கு 549)

யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13

கே.எல்.ராகுல் 6

சாய் சுதா்சன் 2*

பந்துவீச்சு

மாா்கோ யான்சென் 1/14

சைமன் ஹாா்மா் 1/1

கேசவ் மஹராஜ் 0/5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com