இந்திய வீரர்களை மண்டியிடச் செய்ய விரும்பினோம்! தெ.ஆ. பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து!

இந்திய வீரர்களுக்கு எதிராக தென்னாப்பிரிக்க பயிற்சியாளரின் சர்ச்சை கருத்து பற்றி...
தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் (நடுவில்)
தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் (நடுவில்)AP
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வேண்டுமென்று தாமதப்படுத்தி டிக்ளேர் செய்தது குறித்து தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குவாஹாட்டியில் நடைபெற்று வருகின்றது. முதல் போட்டியில் வென்ற தென்னாப்பிரிக்கா, இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங் செய்து, முதல் இன்னிங்ஸில் 489 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி பேட்டர்கள் சொதப்பியதால், 201 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகி ஏமாற்றம் அளித்தது.

ஃபாலோ -ஆன் வாய்ப்பு இருந்தும் தென்னாப்பிரிக்க அணி மீண்டும் பேட்டிங் விளையாடத் தொடங்கியது. நான்காவது நாளான இன்று மதிய உணவு இடைவேளையில் 220 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

அந்த சமயத்தில், இந்தியாவைவிட 508 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த தென்னாப்பிரிக்கா அணி, டிக்ளேர் செய்யும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அந்த அணி தொடர்ந்து பேட்டிங் செய்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

நான்காம் நாளில் 15 ஓவர்கள் மீதமிருந்த நிலையில், தென்னாப்பிரிக்காவில் டிரிஸ்டன் ஸ்டப்ஸை ஜடேஜா அவுட்டாக்கியவுடன் டிக்ளேர் செய்தனர்.

இந்த நிலையில், தாமதமாக டிக்ளேர் செய்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தென்னாப்பிரிக்காவின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட், சர்ச்சை கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் பேசியதாவது:

“இந்திய வீரர்கள் நீண்ட நேரத்தை களத்தில் செலவிட வேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். அவர்களை மண்டியிடச் செய்ய (க்ரோவல் - Grovel) விரும்பினோம். அவர்களை ஆட்டத்தில் இருந்து முழுமையாக வெளியேற்றி, முடிந்தால் கடைசி நாளில் வென்று பாருங்கள் எனச் சொல்ல நினைத்தோம்” எனத் தெரிவித்தார்.

அவர் க்ரோவல் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியது பெரும் சர்ச்சையாகி உள்ளது. க்ரோவல் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இனவெறி அடிப்படையில் தலைகுனிய வைப்பது, மண்டியிடச் செய்வது, நிலத்தில் ஊர்ந்து செல்வது எனப் பல பொருள்கள் உள்ளன.

கடந்த 1976 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களை ’க்ரோவல்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, இனவெறி அடிப்படையில் தலைக்குனிந்து செல்ல வைப்போம் என்று அப்போதைய இங்கிலாந்து கிரிக்கெட் கேப்டன் டோனி கிரைக் தெரிவித்தார்.

இந்த வார்த்தையால் ஒவ்வொரு வீரர்களின் ரத்தமும் கொதிப்பதாக அப்போதைய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் க்ளைவ் லாய்ட் பதிலடி கொடுத்தார்.

வெறும் வார்த்தைகளால் மட்டுமல்ல, இங்கிலாந்துக்கு எதிரான தொடரையும் 3-0 என்ற புள்ளி கணக்கில் வென்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி.

தற்போது இந்தியாவை நோக்கி அதே வார்த்தையை தென்னாப்பிரிக்க அணியின் தலைமைப் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com