கௌதம் கம்பீர் என்னுடைய உறவினர் கிடையாது; ரவிச்சந்திரன் அஸ்வின் கூறுவதென்ன?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.
gautam gambhir
கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)
Updated on
2 min read

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இந்த தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-0 என முழுமையாகக் கைப்பற்றி அசத்தியது.

முதல் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணியை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா வரலாற்று வெற்றி பெற்றது.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு, 3-வது முறையாக டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஏற்பட்ட வரலாற்று தோல்விக்குப் பிறகு, பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான விமர்சனங்கள் அதிகரித்தன. அவரைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு வீரர்கள் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் எனக் கூறாமல், தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட வேண்டும் எனக் கூறுவது சரியாகாது என இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

ரவிச்சந்திரன் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வின்

இது தொடர்பாக அவர் பேசியதாவது: கௌதம் கம்பீர் மீது ஏன் இத்தனை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நாம் ஏன் இதனை செய்து கொண்டிருக்கிறோம். கிரிக்கெட் என்பது விளையாட்டு. அணியை நிர்வகிப்பது அவ்வளவு எளிது கிடையாது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி கௌதம் கம்பீருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்திருக்கும். அதனை நாம் கண்டிப்பாக புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை பொறுப்பிலிருந்து நீக்குவது நன்றாக இருப்பது போன்று தெரியலாம். ஆனால், ஒருவரை அப்படி நீக்கக் கூடாது.

ஒருவரை பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் எனக் கூறும் நபராக நான் ஒருபோதும் இருந்ததில்லை. நான் யாருக்கும் ஆதரவாகப் பேசவில்லை. கௌதம் கம்பீர் ஒன்றும் என்னுடைய உறவினர் கிடையாது. என்னாலும் 10 தவறுகளை சுட்டிக் காட்ட முடியும். தவறுகள் நடக்கும். யாரும் தவறுகள் செய்யக் கூடும்.

தோல்விக்கு யார் பொறுப்பேற்றுக் கொள்வது என நாம் எளிதில் கேட்டுவிடுகிறோம். ஏனெனில், இந்திய கிரிக்கெட்டில் அதிகம் சம்பாதிக்கலாம் என்பது உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அதனால், பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள பலரும் தயாராக இருக்கின்றனர். ஆனால், பயிற்சியாளர் பேட்டினை எடுத்துக் கொண்டு போட்டிகளில் களமிறங்கி விளையாட முடியாது. பயிற்சியாளர் என்ன செய்ய முடியும் என நினைக்கிறீர்கள். வீரர்கள் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. தனிப்பட்ட முறையில், தனிப்பட்ட நபர் ஒருவரை கடுமையாக விமர்சிப்பது எனக்குப் பிடிக்கவில்லை. ஏனெனில், நாம் குறை கூறுவதற்கு எப்போதும் ஒருவரை தேடிக் கொண்டே இருக்கிறோம் என்றார்.

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கௌதம் கம்பீரின் பதவிக்காலம் வருகிற 2027 ஆம் ஆண்டு வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Former Indian cricketer Ravichandran Ashwin has spoken about the Indian team's head coach Gautam Gambhir.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com