
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொழும்புவில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
129 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி வங்கதேசத்தின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரமீம் ஷமீம் 23 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, கேப்டன் ஃபாத்திமா சனா 22 ரன்களும், முனீபா அலி 17 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஷோர்னா அக்தர் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மரூஃபா அக்தர், நஹிதா அக்தர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், நிஷிதா நிஷி, ஃபஹிமா கட்டூன் மற்றும் ரபேயா கான் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
வங்கதேசம் வெற்றி
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம் 31.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேச அணியில் அதிகபட்சமாக ரூபியா ஹைதர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 77 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஷோபனா மோஸ்டாரி 24 ரன்களும், நிகர் சுல்தானா 23 ரன்களும் எடுத்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஃபாத்திமா சனா, டையானா பைக் மற்றும் ரமீம் ஷமீம் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய மரூஃபா அக்தருக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: அப்பாவித்தனமான முகம் ஷுப்மன் கில்லை காப்பாற்றியது: அபிஷேக் சர்மா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.