
டெஸ்ட் கிரிக்கெட்டில் உங்களுடன் பல ஆண்டுகளாக இணைந்து விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வினை மிஸ் செய்கிறீர்களா என்ற கேள்விக்கு ரவீந்திர ஜடேஜா பதிலளித்துள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த ஆண்டின் இறுதியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்திய அணிக்காக கடந்த 12 ஆண்டுகளாக 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின், 537 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
இந்திய அணி கடந்த 12 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்ததில், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் பங்களிப்பு அளப்பரியது. இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். கடந்த ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இவர்கள் இருவரும் இணைந்து விளையாடிய நிலையில், தற்போது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தன்னுடைய பந்துவீச்சு பார்ட்னரான அஸ்வின் இல்லாமல் ஜடேஜா விளையாடி வருகிறார்.
கடந்த ஆண்டு சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் 12 ஆண்டுகால ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் தனது ஆதிக்கத்தைத் தொடங்குவதாகத் தெரிகிறது.
அஸ்வினை மிஸ் செய்கிறீர்களா?
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே ரவீந்திர ஜடேஜா சிறப்பாக செயல்பட்ட நிலையில், அவரிடம் உங்களது பந்துவீச்சு பார்ட்னர் ரவிச்சந்திரன் அஸ்வினை மிஸ் செய்கிறீர்களா எனக் கேட்கப்பட்டது.
இந்த கேள்விக்கு பதிலளித்து ரவீந்திர ஜடேஜா பேசியதாவது: டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வினை நாங்கள் கண்டிப்பாக மிஸ் செய்கிறோம். பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டுக்கு அஸ்வின் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். அவர் போட்டியை வென்று கொடுப்பவர். டெஸ்ட் போட்டிகளில் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாமல் விளையாடும்போது, இந்த நேரத்தில் அஸ்வின் பந்துவீச வேண்டும் எனத் தோன்றும். பின்னர், அவர் அணியில் தற்போது இல்லை என்ற உண்மையை உணர்வேன்.
குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் போதுமான அளவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளதால், அவர்களை நாம் இளம் வீரர்கள் எனக் கூற முடியாது. ஆனால், அவர்கள் இருவரின் கூட்டணி வித்தியாசமானது. எதிர்காலத்தில் ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லை எனக் கூறுவார்கள். என்னுடைய இடத்துக்கு வேறு ஒரு வீரர் வருவார். இது கண்டிப்பாக நடக்கும் என்றார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 104* ரன்கள் எடுத்தது மட்டுமின்றி, 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.