மே.இ.தீவுகளை வீழ்த்தி இன்னிங்ஸ் வெற்றி; முதல் டெஸ்ட்டில் இந்தியா அபாரம்!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 140 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
Indian team players
இந்திய அணி வீரர்கள்படம் | AP
Published on
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி 140 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாதில் நடைபெற்றது. நேற்று முன் தினம் (அக்டோபர் 2) தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதனையடுத்து, முதல் இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அசத்தலான சதங்களால் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் எடுத்தது. கே.எல்.ராகுல் (100 ரன்கள்), துருவ் ஜுரெல் (125 ரன்கள்) மற்றும் ரவீந்திர ஜடேஜா (104* ரன்கள்) எடுத்தனர். இதன் மூலம், மேற்கிந்தியத் தீவுகளைக் காட்டிலும் இந்திய அணி 286 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருந்தது.

இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்திய இந்தியா

ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று (அக்டோபர் 4) இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் எடுத்த 448 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. இதனையடுத்து, 286 ரன்கள் பின் தங்கிய நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கியது.

இரண்டாவது இன்னிங்ஸிலும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 140 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக அலிக் அதனாஸ் 38 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, ஜஸ்டின் கிரீவ்ஸ் 25 ரன்களும், ஜேடன் சீல்ஸ் 22 ரன்களும் எடுத்தனர்.

இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

அபாரமாக விளையாடி சதம் விளாசியதுடன், 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்திய ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

Summary

India won the first Test against West Indies by 140 runs and an innings.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com