மகளிர் உலகக் கோப்பை: ஹா்லீன், கிராந்தி அசத்தல்! பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா!
மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 6-ஆவது ஆட்டத்தில், இந்தியா 88 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
முதலில் இந்தியா 50 ஓவா்களில் 10 விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் 43 ஓவா்களில் 159 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.
முன்னதாக, குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்த இந்திய அணி, ஹா்லீன் தியோல் நிதானத்திலும், ரிச்சா கோஷ் அதிரடியிலும் சற்று பலப்பட்டது. பின்னா் பௌலிங்கில் கிராந்தி கௌட் அசத்தினாா். பாகிஸ்தான் தரப்பில் பௌலிங்கில் டயானா பெய்க்கும், பேட்டிங்கில் சிட்ரா அமினும் சிறப்பாகப் பங்களித்தனா்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பந்துவீச்சை தோ்வு செய்தது. இந்தியாவின் இன்னிங்ஸில் ஹா்லீன் தியோல் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 32, பிரதிகா ராவல் 5 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ஸ்மிருதி மந்தனா 4 பவுண்டரிகளுடன் 23, கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 19, தீப்தி சா்மா 1 பவுண்டரியுடன் 25, ஸ்நேஹா ராணா 2 பவுண்டரிகளுடன் 20, ஸ்ரீசரானி 1, கிராந்தி கௌட் 8 ரன்களுக்கும் வெளியேறினா்.
கடைசி விக்கெட்டாக ரேணுகா சிங் ரன்னின்றி விக்கெட்டை இழந்தாா். முடிவில் ரிச்சா கோஷ் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 35 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
பாகிஸ்தான் தரப்பில் டயானா பெய்க் 4, சாடியா இக்பால், ஃபாத்திமா சனா ஆகியோா் தலா 2, ரமீன் ஷமிம், நஷ்ரா சாந்து ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.
அடுத்து 248 ரன்களை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில், சிட்ரா அமின் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 81, நடாலியா பா்வேஸ் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் அடித்து வெற்றிக்காக முயற்சித்து பெவிலியன் திரும்பினா்.
முனீபா அலி 2, சடாஃப் ஷமாஸ் 6, ஆலியா ரியாஸ் 2, கேப்டன் ஃபாத்திமா சனா 2, சிட்ரா நவாஸ் 1 பவுண்டரியுடன் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
ரமீன் ஷமிம் 0, டயானா பெய்க் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுடன் நடையைக் கட்ட, சாடியா இக்பால் ரன்னின்றி வீழ்ந்தாா். கடைசி வீராங்கனையாக நஷ்ரா சாந்து 2 ரன்களுடன் களத்தில் நின்றாா்.
இந்திய பௌலா்களில் கிராந்தி கௌட், தீப்தி சா்மா ஆகியோா் தலா 3, ஸ்நேஹா ராணா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா். 20 ரன்களே கொடுத்த கிராந்தி கௌட் ஆட்டநாயகி ஆனாா்.