
உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் குவாஹாட்டியில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இருவர் அரைசதம்; 228 ரன்கள் இலக்கு!
டாஸ் வென்று முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ப்ரூக் ஹால்லிடே 69 ரன்களும், கேப்டன் சோஃபி டிவைன் 63 ரன்களும் எடுத்தனர். அவர்களைத் தொடர்ந்து, சூஸி பேட்ஸ் 29 ரன்களும், மேடி கிரீன் 25 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் ரபேயா கான் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மரூஃபா அக்தர், நஹிதா அக்தர், நிஷிதா அக்தர் மற்றும் ஃபஹிமா கட்டூன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
நியூசிலாந்து அபார வெற்றி
228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசம், 39.5 ஓவர்களின் முடிவில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், 100 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
வங்கதேச அணியின் டாப் ஆர்டர் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வீராங்கனைகள் பலரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அந்த அணியில் அதிகபட்சமாக ஃபஹிமா கட்டூன் 34 ரன்களும், ரபேயா கான் 25 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் ஜெஸ் கெர் மற்றும் லீ தஹுஹு தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினர். ரோஸ்மேரி 2 விக்கெட்டுகளையும், அமெலியா கெர் மற்றும் ஈடன் கார்சன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்த ப்ரூக் ஹால்லிடேவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
இதையும் படிக்க: என்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை வழங்கக் கூடாது: மோஷின் நக்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.