
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் அந்த அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா தனித்தனியாக பேசியுள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி திடலில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அதன் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியைக் காட்டிலும் மேற்கிந்தியத் தீவுகள் 378 ரன்கள் பின் தங்கியுள்ளது.
இந்த நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் முன்னாள் வீரர் பிரையன் லாரா தனித்தனியாக பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக கிரிக்கெட் தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நிறைவடைந்த பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரா மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களின் அறைக்குச் சென்றார். மேற்கிந்தியத் தீவுகள் வீரர்களுடன் அவர் எந்த ஒரு பொதுவான ஆலோசனையையும் மேற்கொள்ளவில்லை. ஆனால், அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி மற்றும் கேப்டன் ராஸ்டன் சேஸ் இருவருடனும் தனித்தனியாக பேசினார்.
மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் அறையில் அவர் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் இருந்தார். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் நிலை மற்றும் அதன் வளர்ச்சி குறித்து அவர் பொதுவான ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருவதும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் நிலை மாற வேண்டுமென்றால், அதன் பொருளாதார நிலை சரியாக இருக்க வேண்டும் என அண்மையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பிரையன் லாரா பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.