
உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 330 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
ஸ்மிருதி மந்தனா, பிரதீகா ராவல் அசத்தல்
முதலில் விளையாடிய இந்திய அணி 48.5 ஓவர்களில் 330 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளான பிரதீகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் எடுத்து அசத்தினர். இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 66 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரதீகா ராவல் 96 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அதன் பின் களமிறங்கியவர்களில் ஹர்லீன் தியோல் (38 ரன்கள்), ஹர்மன்பிரீத் கௌர் (22 ரன்கள்), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (33 ரன்கள்), ரிச்சா கோஷ் (32 ரன்கள்), அமன்ஜோத் கௌர் (16 ரன்கள்) எடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆஸ்திரேலியா தரப்பில் அன்னாபெல் சதர்லேண்ட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். சோஃபி மோலிநியூக்ஸ் 3 விக்கெட்டுகளையும், ஆஷ்லே கார்டனர் மற்றும் மேகன் ஷுட் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி களமிறங்குகிறது.
இதையும் படிக்க: ஒருநாள் கிரிக்கெட்டில் வரலாறு படைத்த ஸ்மிருதி மந்தனா!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.