
ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என யாரும் எந்தவொரு சாதகமும் செய்யவில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரோஹித் சர்மா அறிவித்ததைத் தொடர்ந்து, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையிலான இளம் இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.
டெஸ்ட் போட்டிகளைத் தொடர்ந்து, ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் புதிய கேப்டனாகவும் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். வருகிற அக்டோபர் 19 முதல் தொடங்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து இந்திய அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் செயல்படவுள்ளார். 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரை மனதில் வைத்து ஷுப்மன் கில் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும் என யாரும் எந்தவொரு சாதகமும் செய்யவில்லை என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஷுப்மன் கில் கேப்டனாக அவரது முடிவுகளை அவரே எடுக்கிறார். அவரை அவராக செயல்பட விடுவதே அவர் சிறப்பாக செயல்படுவதன் ரகசியம். டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலோ அல்லது ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதிலோ யாரும் ஷுப்மன் கில்லுக்கு எந்த ஒரு சாதகமும் செய்யவில்லை என நினைக்கிறேன்.
இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதற்கு அவர் மிகவும் தகுதியானவர் என நினைக்கிறேன். அவர் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். ஷுப்மன் கில்லுக்கு வைக்கப்பட்ட மிகவும் கடினமான தேர்வில் அவர் ஏற்கனவே தேர்ச்சி பெற்றுவிட்டார். இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அணியை சிறப்பாக வழிநடத்தி ஷுப்மன் கில் ஏற்கனவே தேர்ச்சியடைந்துவிட்டார் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.