
சாதனைகள் குறித்து அதிகம் யோசிப்பதில்லை என இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்றுடன் நிறைவடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. டெஸ்ட் தொடரையும் 2-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.
இரண்டாவது போட்டியில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகனகாவும், தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்ட ரவீந்திர ஜடேஜா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த நிலையில், 6-வது வீரராக களமிறங்கி விளையாடுவது தன்னை ஒரு சரியான பேட்டராக யோசிக்க வைப்பதாகவும், தன்னுடைய பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்துக்கு காரணம் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் என உணர்வதாகவும் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கடந்த 5-6 மாதங்களாக நாங்கள் எந்த மாதிரியான கிரிக்கெட்டினை விளையாடுகிறோம் என்பது எங்களுக்குத் தெரியும் என நினைக்கிறேன். ஒரு அணியாக நாங்கள் சிறப்பாக செயல்படுகிறோம். 6-வது வீரராக நான் களமிறங்குகிறேன் என கௌதம் கம்பீர் கூறினார். அதனால், நான் நேர்த்தியான பேட்டரைப் போன்று பல விஷயங்களை யோசித்தேன். அவ்வாறு செயல்பட்டது பலனளித்தது. பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக 8-வது அல்லது 9-வது வீரராக களமிறங்கி விளையாடினேன். அதனால், அப்போது என்னுடைய மனநிலை சற்று வித்தியாசமாக இருந்தது.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலுமே நாங்கள் ஒரு அணியாக சிறப்பாக செயல்படுகிறோம். எப்போதெல்லாம் பேட்டிங் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நீண்ட நேரம் களத்தில் நிலைத்து நின்று ஆட விரும்புகிறேன். நேர்மையாகக் கூறவேண்டுமென்றால், சாதனைகள் குறித்து நான் அதிகம் யோசிப்பதில்லை. அணியின் வெற்றிக்காக பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை எப்போதும் வழங்க முயற்சிக்கிறேன். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சரியாக செயல்படவில்லையென்றால், ஒரு மதிப்புமிக்க வீரராக சிறப்பாக செயல்படவில்லை என உணர்கிறேன் என்றார்.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 104 ரன்கள் எடுத்தார். மேலும், இந்த தொடரில் அவர் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.