
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் புதன்கிழமை மோதிய 16-ஆவது ஆட்டம் மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.
இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. ஏற்கெனவே, இதே இடத்தில் இலங்கை- நியூஸிலாந்து அணிகள் செவ்வாய்க்கிழமை மோதிய ஆட்டமும் மழையால் பாதியில் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக புதன்கிழமை ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து பேட் செய்ய, இடையே மழை குறுக்கிட்டதால் அந்த அணிக்கான ஓவர்கள் 31-ஆகக் குறைக்கப்பட்டது. அதன் முடிவில் இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்தது.
பின்னர் "டக்வொர்த் லீவிஸ்' முறையில் பாகிஸ்தான் அணிக்கு 31 ஓவர்களில் 113 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி தனது இன்னிங்ûஸ தொடங்கி, 6.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் எடுத்திருந்தபோது மழையால் மீண்டும் ஆட்டம் தடைப்பட்டது. இதையடுத்து ஆட்டம் அப்படியே கைவிடப்பட்டது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான், பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து பேட்டர்களில் அதிகபட்சமாக சார்லி டீன் 3 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
ஹீதர் நைட் 4 பவுண்டரிகளுடன் 18, எம் அர்லாட் 2 பவுண்டரிகளுடன் 18, ஆலிஸ் கேப்சி 2 பவுண்டரிகளுடன் 16, சோஃபியா டங்க்லி 1 பவுண்டரியுடன் 11 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.
எமி ஜோன்ஸ் 8, டேமி பியூமன்ட் 4, கேப்டன் நேட் சிவர் பிரன்ட் 4, எம்மா லாம்ப் 4 ரன்களுக்கு விடைபெற, ஓவர்கள் முடிவில் சாரா கிளென் 3, லின்சே ஸ்மித் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஃபாத்திமா சனா 4, சாதியா இக்பால் 2, டயானா பெய்க், ரமீன் ஷமிம் ஆகியோர் தலா 1 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் 113 ரன்களை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணியில், முனீபா அலி 9, ஒமைமா சோஹைல் 4 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு விளையாடி வருகையில், மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.