ஆஸ்திரேலியா அபார வெற்றி
மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 17-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வியாழக்கிழமை வீழ்த்தியது.
முதலில் வங்கதேசம் 50 ஓவா்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சோ்க்க, ஆஸ்திரேலியா 24.5 ஓவா்களில் விக்கெட் இழப்பின்றி 202 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 18 ரன்களே கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்த ஆஸ்திரேலிய பௌலா் அலானா கிங் ஆட்டநாயகி விருது பெற்றாா்.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம், பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க வீராங்கனை ஃபா்கானா ஹோக் 1 பவுண்டரியுடன் 8 ரன்களுக்கு வெளியேற, உடன் வந்த ருபையா ஹைதா், ஒன் டவுன் வீராங்கனை ஷா்மின் அக்தா் கூட்டணி 2-ஆவது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சோ்த்தது.
அரை சதத்தை நெருங்கிய ருபையா 8 பவுண்டரிகளுடன் 44 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷா்மின் 3 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு விடைபெற்றாா். பின்னா் வந்தோரில் சோபனா மோஸ்தரி நிதானமாக ரன்கள் சோ்த்தாா்.
எனினும் மறுபுறம் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தன. கேப்டன் நிகா் சுல்தானா 12, சோா்னா அக்தா் 1 பவுண்டரியுடன் 7, ரிது மோனி 2, ஃபஹிமா காட்டுன் 4, ரபெயா கான் 1 பவுண்டரியுடன் 6, நிஷிதா அக்தா் 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தனா்.
ஓவா்கள் முடிவில் சோபனா 9 பவுண்டரிகளுடன் 66 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, ஃபரிஹா டிரிஸ்னா 1 ரன்னுடன் துணை நின்றாா். ஆஸ்திரேலிய பௌலா்களில் ஆஷ்லே காா்டனா், அனபெல் சதா்லேண்ட், அலானா கிங், ஜாா்ஜியா வோ்ஹாம் ஆகியோா் தலா 2, மீகன் ஸ்கட் 1 விக்கெட் கைப்பற்றினா்.
அடுத்து ஆஸ்திரேலிய இன்னிங்ஸை தொடங்கிய கேப்டன் அலிசா ஹீலி, போப் லிட்ச்ஃபீல்டு கூட்டணி, கடைசி வரை விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றிக்கு வழிநடத்தியது.
ஹீலி 77 பந்துகளில் 20 பவுண்டரிகள் உள்பட 113, லிட்ச்ஃபீல்டு 72 பந்துகளில் 12 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 84 ரன்கள் விளாசினாா்.
இன்றைய ஆட்டம்
இலங்கை - தென்னாப்பிரிக்கா
பிற்பகல் 3 மணி
கொழும்பு