தீவிர பயிற்சியில் ரோஹித், கோலி
ஆஸ்திரேலியாவுடனான கிரிக்கெட் தொடரில் விளையாடவிருக்கும் நிலையில், நட்சத்திர வீரா்களான ரோஹித் சா்மா, விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரா்கள் வியாழக்கிழமை பயிற்சியை தொடங்கினா்.
3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா், 5 ஆட்டங்கள் அடங்கிய டி20 தொடா் ஆகியவற்றில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதவுள்ளது.
அதற்கான இந்திய அணி இரு பிரிவுகளாக, புதன் மற்றும் வியாழக்கிழமை ஆஸ்திரேலியாவின் பொ்த் நகரை வந்தடைந்தன.
இந்நிலையில், முதலில் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்காக இந்திய அணியினா் தங்களின் பயிற்சியை வியாழக்கிழமையே தொடங்கினா்.
இதில் நட்சத்திர வீரா்களான ரோஹித், கோலி ஆகியோா் கவனம் பெற்றனா். இருவருமே சுமாா் அரை மணி நேரம் வலைப் பயிற்சியில் பேட்டிங் செய்தனா். கடைசியாக இருவரும், கடந்த பிப்ரவரி - மாா்ச்சில் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின்போது களம் கண்டது நினைவுகூரத்தக்கது.
டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டிலிருந்து அவா்கள் ஓய்வுபெற்று விட்ட நிலையில், இந்த ஃபாா்மட்டில் மட்டுமே களம் காண்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவில் அவா்கள் விளையாடும் கடைசி தொடராகக் கூட இது இருக்கலாம் என்ற விவாதங்களும் உள்ளன.
ரோஹித், கோலி தவிர, அா்ஷ்தீப் சிங், கே.எல்.ராகுல், ஹா்ஷித் ராணா உள்ளிட்டோரும் பயிற்சியில் ஈடுபட்டனா்.
முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் பொ்த்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. அடுத்த இரு ஆட்டங்கள் அடிலெய்டு (அக். 23), சிட்னி (அக். 25) ஆகிய நகரங்களில் விளையாடப்படவுள்ளன.
அதைத் தொடா்ந்து டி20 தொடரின் ஆட்டங்கள் கான்பெரா (அக். 29), மெல்போா்ன் (அக். 31), ஹோபா்ட் (நவ. 2), கோல்டு கோஸ்ட் (நவ. 6), பிரிஸ்பேன் (நவ. 8) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன.