
அறிமுக ரஞ்சி கோப்பையில் இரட்டை சதம் அடித்த தில்லி வீரர் ஆயுஷ் தோசேஜா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார்.
எம்பிஏ மாணவரான இவர் தனது முன்னோடி விராட் கோலியுடன் அறிமுகப் போட்டியில் விளையாட இருந்தவர் என்பவர் என்ற தகவலால் கவனம் ஈர்த்துள்ளார்.
தில்லியைச் சேர்ந்த ஆயுஷ் தோசேஜா (23 வயது) இடது கை பேட்டராவார். இவர் தனது முதல் ரஞ்சி கோப்பை போட்டியில் இந்தாண்டில் விராட் கோலியுடன் களமிறங்க திட்டமிடப்பட்டிருந்தது.
எதிர்பாராத விதமாக சௌராஷ்டிரா போட்டியின்போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணத்தினால் விராட் கோலியுடன் விளையாட முடியாமல் சென்றது.
யு-23 தொடரான சிகே நாயுடு போட்டிகளில் 550க்கும் அதிகமான ரன்கள் குவித்து பிரபலமானார்.
விராட் கோலி தனது கடைசி சிவப்புப் பந்து போட்டியினை தில்லியில் ரயில்வே அணிக்கு எதிராக விளையாடினார். இதில்தான் ஆயுஷ் தோசேஜா அறிமுகமாக இருந்து தவறவிட்டார்
இது குறித்து அவர் பேசியதாவது:
சிறுவனாக இருக்கும்போது விராட் கோலியுடன் விளையாட வேண்டும் என்பது மட்டுமே ஒரே கனவாக இருக்கும். அந்த வாய்ப்பு எனக்கு வந்து மறைந்துவிட்டது.
சில நாள்கள் அதற்காக கவலையுடன் இருந்தேன். ஆனால், எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அதற்கேற்ப இன்று எனக்கு கடவுள் வேறு திட்டத்தை அளித்துள்ளார்.
ரஞ்சியில் முதல்போட்டியிலே இரட்டைச் சதம் அடித்து விராட் கோலியுடன் விளையாடாமல் விட்டதற்கான வலியை குறைத்துவிட்டது.
நானும் சனத்தும் அதிகமாக யு-23, யு-25 போட்டிகளில் விளையாடி இருக்கிறோம். எங்களுக்கு நல்ல புரிதல் இருக்கிறது என்றார்.
டிடிசிஏ சீனியர் லீக் கிரிக்கெட்டில் 14 வயதிலேயே அறிமுகமானேன். முதல் போட்டியிலேயே அரைசதம் அடித்தேன். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் நான். எனது பயிற்சியாளர்கள் எனக்கு மிகவும் உதவினார்கள்.
கிரிக்கெட் விளையாடினாலும் நான் படித்துக்கொண்டே இருப்பேன். பள்ளிப் புத்தகங்கள் இல்லாவிட்டாலும் பொது அறிவு புத்தகங்களையாவது படிப்பேன்.
10, 12ஆம் வகுப்புகளில் முறையே 89, 90 சதவிகித மதிப்பெண்கள் எடுத்தேன். தில்லி பல்கலை.யில் பி.காம் முடித்தேன். தற்போது, எம்பிஏ படித்துக்கொண்டே ரஞ்சியில் விளையாடி வருகிறேன்.
இது பிளான் பி அல்ல. இரண்டுமே செய்ய முடியும் எனும்போது ஏன் கூடாது என்று படிக்கிறேன்.
தில்லி கேபிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிக்கான தேர்வு ஆட்டங்களில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இருந்தும் ரஞ்சி கோப்பையினால் செல்ல முடியவில்லை என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.