
இந்திய அணியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடர்ச்சியாக இடம்பெறுவது குறித்து அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் பேசியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த ஆண்டு சர்வதேச டி20 போட்டிகளிலிருந்தும், இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சரியாக விளையாடாவிட்டால் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் அணியிலிருந்து நீக்கப்படுவார்களா என்பது குறித்து அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் ஒவ்வொரு போட்டியிலும் மதிப்பிடுவது சரியாகாது. அவர்கள் விளையாட ஆரம்பித்தவுடன் அவர்களது ஆட்டம் குறித்த மதிப்பீடு இருக்கும். ஆனால், அந்த ஆட்டத்தை அடிப்படையாக வைத்து அவர்களுக்கு அணியில் இடம் கிடைக்குமா? கிடைக்காதா? என்பதற்கான சோதனை போன்று இருக்காது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரன்கள் குவிக்காவிட்டால், அவர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்றும், மூன்று போட்டிகளிலும் சதங்கள் விளாசினால் அவர்கள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்றும் அர்த்தமாகாது. 2027 உலகக் கோப்பைத் தொடருக்கான அணியைத் தேர்வு செய்ய இன்னும் நாள்கள் இருக்கின்றன என்றார்.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (அக்டோபர் 19) முதல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.