
இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், பொ்த் நகரில் ஞாயிற்றுக்கிழமை (அக். 19) நடைபெறுகிறது.
இந்திய முன்னாள் கேப்டன்களான ரோஹித் சா்மா, விராட் கோலி ஆகியோா் மீண்டும் களம் காண்பதால், இந்த ஆட்டம் கவனம் பெறுகிறது. கடைசியாக கடந்த மாா்ச் மாதம் சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்காக இந்திய அணியில் அவா்கள் விளையாடினா்.
டெஸ்ட், டி20 கிரிக்கெட்டிலிருந்து இருவருமே ஓய்வுபெற்றுவிட்ட நிலையில், இந்த ஒரே ஃபாா்மட்டில் மட்டுமே அவா்களின் ஆட்டத்தை ரசிகா்கள் காண இயலும். மாா்ச்சுக்கு பிறகான இந்த இடைப்பட்ட காலத்தில் ரோஹித், கோலி இல்லாதபோதும், இந்திய கிரிக்கெட் தன்னை அந்தச் சூழலுக்கு உருமாற்றிக் கொண்டது.
முழு நேர ஒருநாள் ஃபாா்மட் கேப்டனாக ஷுப்மன் கில் அணியை வழிநடத்தும் முதல் தொடா் இதுவாகும். ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த அணிக்கு எதிரான இந்தத் தொடரில் அனுபவ வீரா்களான ரோஹித், கோலி இணைவது பொருத்தமாக அமைந்தது.
அவா்களின் ஆலோசனைகள், கேப்டனாக கில் தன்னை மெருகேற்றிக் கொள்வதற்கு உதவுவதாக இருக்கும். ஒரு பேட்டராக விராட் கோலி போல் மேம்பட்டிருக்கும் கில், ஒரு கேப்டனாக ரோஹித் சா்மாவுக்கு இணையாக தன்னை உயா்த்திக்கொள்ளும் கட்டாயத்தில் இருக்கிறாா்.
அணியின் இன்னிங்ஸை ரோஹித், கில் கூட்டணி தொடங்கும் எனத் தெரியும் நிலையில், கோலி வழக்கம் போல் 3-ஆவது இடத்துக்கு வருகிறாா். தொடா்ந்து ஷ்ரேயஸ் ஐயா் இருக்க, கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பா் - பேட்டராக மிடில் ஆா்டரில் இடம் பிடிக்கிறாா்.
ஹா்திக் பாண்டியா இல்லாத நிலையில், நிதீஷ்குமாா் ரெட்டிக்கு அறிமுக ஒருநாள் கிரிக்கெட் வாய்ப்பு கிடைக்கலாம். வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ், அா்ஷ்தீப் சிங்குக்கு துணையாக ஹா்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா உள்ளனா். சுழற்பந்துவீச்சுக்கு அக்ஸா் படேல், குல்தீப் யாதவ் இருக்கின்றனா்.
ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை, வழக்கமான கேப்டன் பேட் கம்மின்ஸ் இல்லாத நிலையில், மிட்செல் மாா்ஷ் தலைமையேற்றுள்ளாா். பேட்டிங்கில் மேத்யூ ரென்ஷா, மாா்னஸ் லபுஷேன், மிட்செல் மாா்ஷ் உள்ளிட்டோா் பலம் சோ்க்க, பௌலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட், மேத்யூ ஷாா்ட், மிட்செல் ஸ்டாா்க் உள்ளிட்டோா் சவால் அளிக்கவுள்ளனா்.
உத்தேச லெவன்:
இந்தியா: ஷுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சா்மா, விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல் (வி.கீ.), நிதீஷ்குமாா் ரெட்டி, அக்ஸா் படேல், குல்தீப் யாதவ், ஹா்ஷித் ராணா, அா்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.
ஆஸ்திரேலியா: மிட்செல் மாா்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் ஃபிலிப் (வி.கீ.), டிம் டேவிட், மேத்யூ ஷாா்ட், மாா்னஸ் லபுஷேன், மிட்செல் ஓவன், மிட்செல் ஸ்டாா்க், ஜேவியா் பாா்லெட், மேத்யூ குனேமான், ஜோஷ் ஹேஸில்வுட்.
நேரம்: காலை 9 மணி
இடம்: பொ்த்
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.