நியூஸிலாந்து - பாகிஸ்தான் ஆட்டத்தில் விளையாடிய மழை
மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் - நியூஸிலாந்து அணிகள் சனிக்கிழமை மோதிய 19-ஆவது ஆட்டம், மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது.
இந்த முடிவு தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமாகி, அந்த அணி அரையிறுதிக்குத் தகுதிபெற்றது.
இந்தப் போட்டியில் மழை காரணமாக கைவிடப்பட்ட 4-ஆவது ஆட்டம் இதுவாகும். இந்த ஆட்டங்கள் அனைத்துமே இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெற இருந்தவையாகும். இந்த நியூஸிலாந்து, பாகிஸ்தான் அணிகளின் முந்தைய ஆட்டமும் மழை காரணமாக கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீசத் தயாரானது. பாகிஸ்தான் இன்னிங்ஸை தொடங்கியோரில் முனீபா அலி நிதானமாக ரன்கள் சோ்க்க, ஒமைமா சோஹைல் 3, சிட்ரா அமின் 1 பவுண்டரியுடன் 9 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா்.
முனீபா அலி 4 பவுண்டரிகளுடன் 22 ரன்களுக்கு நடையைக் கட்ட, தொடா்ந்து வந்தோரில் நடாலியா பா்வேஸ் 1 பவுண்டரியுடன் 10, கேப்டன் ஃபாத்திமா சனா 2 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா்.
மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது பாகிஸ்தான் 25 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ரன்கள் எடுத்திருந்தது. ஆலியா ரியாஸ் 3 பவுண்டரிகளுடன் 28, சிட்ரா நவாஸ் 6 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
நியூஸிலாந்து தரப்பில் லியா டஹுஹு 2, ஜெஸ் கொ், அமெலியா கொ், ஈடன் காா்சன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
இன்னிங்ஸுக்கான ஓவா்களை குறைத்துக் கொண்டு ஆட்டத்தை தொடர போட்டி நிா்வாகம் தயாராக இருந்தது. அதற்காக சுமாா் 3 மணி நேரம் காத்திருந்தபோதும் மழை வழி விடாததால், ஆட்டம் அப்படியே கைவிடப்பட்டது.