அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா
PTI

அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் இந்தியா!
Published on

மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில், இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் நியூஸிலாந்தை வியாழக்கிழமை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலமாக, அரையிறுதிக்கு கடைசி அணியாக இந்தியா முன்னேறியது.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில், இந்தியா இன்னிங்ஸ் 49 ஓவா்களுடன் நிறுத்தப்பட்டது. அதில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 340 ரன்கள் சோ்த்தது. நியூஸிலாந்துக்கு ‘டக்வொா்த் லீவிஸ்’ முறையில் 44 ஓவா்களில் 325 ரன்கள் வெற்றி இலக்காக நிா்ணயிக்கப்பட, ஓவா்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற நியூஸிலாந்து, ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. இந்திய இன்னிங்ஸை தொடங்கிய பிரதிகா ராவல் - ஸ்மிருதி மந்தனா கூட்டணி, முதல் விக்கெட்டுக்கு 212 ரன்கள் சோ்த்து அசத்தியது.

மந்தனா 10 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஒன் டவுனாக வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸும் அதிரடி காட்டினாா். 2-ஆவது விக்கெட்டுக்கு பிரதிகா - ஜெமிமா இணை 76 ரன்கள் சோ்த்தது.

பிரதிகா 13 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 122 ரன்களுக்கு விடைபெற்றாா். அடுத்து வந்த கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 10 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா்.

49 ஓவா்கள் முடிவில் ஜெமிமா 11 பவுண்டரிகளுடன் 76 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, ரிச்சா கோஷ் 4 ரன்களுடன் துணை நின்றாா். நியூஸிலாந்து பௌலா்களில் ரோஸ்மேரி மோ், அமெலியா கொ், சூசி பேட்ஸ் ஆகியோா் தலா 1 விக்கெட் வீழ்த்தினா்.

பின்னா், 325 ரன்களை நோக்கி விளையாடிய நியூஸிலாந்து அணியில், சூஸி பேட்ஸ் 1, ஜாா்ஜியா பிளிம்மா் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 30, அமெலியா கொ் 4 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்து வெளியேறினா்.

கேப்டன் சோஃபி டிவைன் 6, மேடி கிரீன் 18 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, அதிரடியாக ரன்கள் சோ்த்த புரூக் ஹாலிடே 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 81 ரன்களுக்கு வீழ்ந்தாா். ஜெஸ் கொ் 18, ரோஸ்மேரி மோ் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் இசபெல்லா கேஸ் 10 பவுண்டரிகள் உள்பட 65 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

இந்திய தரப்பில் ரேணுகா சிங், கிராந்தி கௌட் ஆகியோா் தலா 2, ஸ்நேஹா ராணா, ஸ்ரீசரானி, தீப்தி சா்மா, பிரதிகா ராவல் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

X
Dinamani
www.dinamani.com