

ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவேனா? மாட்டேனா? என்பது உறுதியாகத் தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கடந்த ஆண்டு சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்தும், இந்த ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தனர். ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்திய அணிக்காக அவர்கள் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இடம்பெற்று விளையாடினர். சிட்னியில் இன்று (அக்டோபர் 25) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் அசத்தலான ஆட்டத்தால் 38.3 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா சதம் விளாசியும், விராட் கோலி அரைசதம் விளாசியும் அசத்தினர். ரோஹித் சர்மா 125 பந்துகளில் 121 ரன்கள் (13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள்), விராட் கோலி 81 பந்துகளில் 74 ரன்கள் (7 பவுண்டரிகள்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மாவுக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு மீண்டும் வருவேனா? மாட்டேனா? என்பது உறுதியாகத் தெரியவில்லை என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார்.
இது தொடர்பாக போட்டி நிறைவடைந்த பிறகு அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவில் விளையாடுவது எப்போதும் மிகவும் பிடிக்கும். கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் விளையாடிய நினைவுகள் இன்னும் என்னுடைய மனதில் இருக்கின்றன. இதற்கு பிறகு, மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு வருவேனா என்பது உறுதியாகத் தெரியவில்லை.
ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் விளையாடுவதற்கு மிகவும் கடினமாக இருக்கும். மேலும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகவும் சவாலளிக்கும் விதமாக பந்துவீசக் கூடியவர்கள். அதனால், இங்கு விளையாடுவது ஒருபோதும் எளிதான விஷயம் கிடையாது. நாங்கள் இந்த தொடரை வெல்லவில்லை. ஆனால், இளம் இந்திய அணி நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டுள்ளது. இந்திய அணிக்காக நாங்கள் விளையாடத் தொடங்கியபோது, மூத்த வீரர்கள் எங்களுக்கு உதவினார்கள். தற்போது இளம் வீரர்களுக்கு உதவ வேண்டியது எங்களது கடமை என்றார்.
இதையும் படிக்க: ஆஸ்திரேலியா அபார வெற்றி; அரையிறுதியில் இந்தியாவுடன் மோதல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.