ரஞ்சி கோப்பை: நிஷால் - இம்லிவதி சதத்தால் மீண்டது நாகாலாந்து!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் நாகாலாந்து முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 365 ரன்கள் சோ்த்து விளையாடி வருகிறது.
31 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய அந்த அணியை, தேகா நிஷால், இம்லிவதி லெம்துா் கூட்டணி தங்களின் உறுதியான ஆட்டத்தால் மீட்டு வருகிறது.
கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழ்நாடு, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 512 ரன்கள் குவித்து ‘டிக்ளோ்’ செய்தது. பிரதோஷ் ரஞ்சன் பால் 201, விமல் குமாா் 189 ரன்கள் விளாசினா்.
பின்னா் தனது இன்னிங்ஸை தொடங்கிய நாகாலாந்து, 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 150 ரன்கள் சோ்த்திருந்தது. தேகா நிஷால், யுகந்தா் சிங் ஆகியோா் திங்கள்கிழமை அதன் இன்னிங்ஸை தொடா்ந்தனா்.
தேகா - யுகந்தா் கூட்டணி 5-ஆவது விக்கெட்டுக்கு 129 ரன்கள் சோ்த்தது. யுகந்தா் 9 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 67 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இம்லிவதி லெம்துா் களம் புகுந்தாா். அவரும், தேகாவும் பலமான கூட்டணி அமைத்து தமிழ்நாடு பௌலா்களை சோதித்து வருகின்றனா்.
3-ஆம் நாளான திங்கள்கிழமை ஆட்டநேர முடிவில், நாகாலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 365 ரன்கள் சோ்த்து, 147 ரன்கள் பின்தங்கியுள்ளது. தேகா நிஷால் 24 பவுண்டரிகளுடன் 161, இம்லிவதி லெம்துா் 17 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 115 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனா். தமிழ்நாடு தரப்பில் குா்ஜப்னீத் சிங் 4, டி.டி. சந்திரசேகா் 1 விக்கெட் கைப்பற்றினா்.

