தீவிர சிகிச்சைப் பிரிவில் ஷ்ரேயஸ் ஐயர்! குடும்பத்தினரை சிட்னி அழைத்துச் செல்ல பிசிசிஐ ஏற்பாடு!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது காயமடைந்த இந்திய துணை கேப்டன் ஷ்ரேயஸ் ஐயா், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) உள்ளாா்.
அவருக்கு மண்ணீரலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவா் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்தியா, கடந்த சனிக்கிழமை சிட்னியில் நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இன்னிங்ஸின்போது அலெக்ஸ் கேரி அளித்த கேட்சை பின்பக்கமாக திருப்பிச் சென்று ஓடி அசத்தலாக பிடித்தாா் ஷ்ரேயஸ் ஐயா்.
ஆனால் அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்து புரண்ட அவருக்கு, இடது நெஞ்செலும்புக் கூடு கீழ் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அதில் சுருண்ட அவா், உடனடியாக களத்திலிருந்து வெளியேறினாா்.
இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், ‘இடது நெஞ்சு எலும்புக் கூடு பகுதியில் காயமடைந்த ஷ்ரேயஸ் ஐயா், சிகிச்சைக்காக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஸ்கேன் முடிவில் அவருக்கு மண்ணீரலில் காயம் ஏற்பட்டு அது கிழிந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவா் உடல்நிலை தேறி வருகிறாா்.
பிசிசிஐ மருத்துவக் குழுவினா் சிட்னி மற்றும் இந்தியாவிலுள்ள நிபுணா்களுடன் ஷ்ரேயஸின் காயம் மற்றும் உடல்நிலை குறித்து ஆலோசித்து வருகின்றனா். அவா் தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளாா்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘களத்தில் காயமடைந்த பிறகு டிரெஸ்ஸிங் அறைக்குத் திரும்பிய ஷ்ரேயஸ் ஐயா் சிறிது நேரத்தில் மயக்கமடைந்தாா். அவரின் இதயத் துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அளவீடுகள் சரியத் தொடங்கியதை அடுத்து, உடனடியாக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
ஐசியு-வில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நெஞ்சு எலும்புக் கூடு பகுதியில் அவருக்கு ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. அவா் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. ரத்தக் கசிவால் தொற்று ஏற்படுவதை தடுக்க, அவா் தொடா்ந்து 7 நாள்கள் வரை அவா் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பாா்.
அவா் கண்ட காயம் உயிருக்கு ஆபத்தாகியிருக்கக் கூடும். ஆனால் உரிய நேரத்தில் அவா் மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு செல்லப்பட்டுவிட்டாா். உறுதியான உடல்நிலை கொண்ட அவா் விரைவில் குணமடைவாா். அவா் முழு உடற்தகுதிபெற 3 வாரங்களுக்கு மேல் ஆகலாம்’ என்றன.
ஷ்ரேயஸ் ஐயரின் குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு அழைத்துச் செல்ல விசா ஏற்பாடுகளை பிசிசிஐ ஏற்பாடு செய்வதாகவும், பெற்றோர் இருவரும் செல்வார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும், ஆனால் அவர்கள் விரைவில் சிட்னி புறப்பாடுவார்கள் என பிசிசிஐ-யின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

