

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் பவர்பிளே ஓவர்கள் மிகவும் முக்கியம் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் டி20 தொடர் தொடங்குகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிகளில் பவர்பிளே ஓவர்கள் மிகவும் முக்கியம் என இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடுவது எப்போதும் சவாலானது. அண்மையில் நிறைவடைந்த ஒருநாள் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் அவர்கள் எப்படி விளையாடினார்கள் என்பதைப் பார்த்தோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பவர்பிளே ஓவர்கள் எப்போதும் முக்கியமானவை.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பவர்பிளே ஓவர்களில் ஜஸ்பிரித் பும்ரா பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். பவர்பிளேவில் அவர் குறைந்தது இரண்டு ஓவர்கள் வீசினார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் பவர்பிளேவில் பந்துவீசும் பொறுப்பினை எடுத்துக் கொள்ளத் தயாராக இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பவர்பிளேவில் பந்துவீசுவது கண்டிப்பாக மிகுந்த சவாலான விஷயமாக இருக்கப் போகிறது.
இந்திய அணிக்காக பல ஆண்டுகளாக ஜஸ்பிரித் பும்ரா மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முக்கியமானத் தொடர்களுக்கு எப்படி தயாராக வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். ஆஸ்திரேலியாவில் அவர் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் குறித்து ஜஸ்பிரித் பும்ரா கூறும் விஷயங்கள் வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. பும்ராவைப் போன்ற அனுபவம் வாய்ந்த ஒருவர் அணியில் இருப்பது மிகவும் சிறப்பான விஷயம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.