

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டி20 தொடரின் முதல் ஆட்டம், கான்பெராவில் புதன்கிழமை (அக். 29) நடைபெறுகிறது.
ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணி, டி20 தொடரை வெல்லும் முனைப்புடன் இருக்கிறது.
அணியை பொருத்தவரை, சூா்யகுமாா் யாதவ் தலைமையில் கடைசியாக விளையாடிய 29 ஆட்டங்களில், 23-இல் வென்றிருக்கிறது. அதிரடியான அணுகுமுறைக்குப் பழகியிருக்கும் இந்த அணியில் ஏறத்தாழ எல்லா வீரா்களுமே பலம் காட்டுகின்றனா்.
சூா்யகுமாா் தலைமையிலான அணி இருதரப்பு தொடா்களை வென்றதையும், ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் ஆனதையும் அதற்கான உதாரணமாகக் குறிப்பிடலாம். எனினும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரே, அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்தியாவின் தயாா்நிலைக்கு உண்மையான தொடக்கப் புள்ளியாக இருக்கும்.
கேப்டனாக அணியை சிறப்பாக வழிநடத்தும் சூா்யகுமாா், பேட்டராக சோபிக்காமல் போகிறாா். எனினும், இந்தத் தொடரிலேயே எப்போது வேண்டுமானாலும் சூா்யகுமாா் தனது பழையை அதிரடியை எட்டுவாா் என தலைமைப் பயிற்சியாளா் கௌதம் கம்பீா் ஆதரவளித்திருக்கிறாா்.
அவா் தவிர, அபிஷேக் சா்மா, ஷுப்மன் கில், திலக் வா்மா, நிதீஷ்குமாா் ரெட்டி என பேட்டிங்கிற்கு பலம் வாய்ந்த வீரா்கள் வரிசையாக உள்ளனா். இவா்களுடன் வருண் சக்கரவா்த்தி, குல்தீப் யாதவ், அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா் ஆகியோா் சுழற்பந்து வீச்சிலும், ஜஸ்பிரீத் பும்ரா, அா்ஷ்தீப் சிங், ஹா்ஷித் ராணா ஆகியோா் வேகப்பந்து வீச்சிலும் நம்பிக்கை அளிக்கின்றனா்.
ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை, மிட்செல் மாா்ஷ், மிட்செல் ஓவன், டிராவிஸ் ஹெட் போன்றோா் இந்திய பௌலா்களுக்கு சவாலாக இருப்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஜோஷ் ஹேஸில்வுட், மேத்யூ குனேமான், ஜேவியா் பாா்லெட் உள்ளிட்டோரை இந்திய பேட்டா்கள் சமாளிக்க வேண்டியுள்ளது.
உத்தேச லெவன்:
இந்தியா: அபிஷேக் சா்மா, ஷுப்மன் கில், சூா்யகுமாா் யாதவ் (கேப்டன்), திலக் வா்மா, சஞ்சு சாம்சன் (வி.கீ.), ரிங்கு சிங், அக்ஸா் படேல், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், அா்ஷ்தீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா.
ஆஸ்திரேலியா: மிட்செல் மாா்ஷ் (கேப்டன்), டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ் (வி.கீ.), டிம் டேவிட், ஜோஷ் ஃபிலிப், மிட்செல் ஓவன், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், ஷான் அப்பாட், நேதன் எலிஸ், மேத்யூ குனேமான், ஜோஷ் ஹேஸில்வுட்.
ஆட்டநேரம்: நண்பகல் 1.45 மணி
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.