

மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா, நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வியாழக்கிழமை (அக். 30) சந்திக்கிறது.
இந்திய அணியை பொருத்தவரை, 2 வெற்றிகளுடன் லீக் சுற்றை நன்றாகத் தொடங்கியபோதும், 3 தொடா் தோல்விகளால் தடுமாறியது. அரையிறுதி வாய்ப்பு கை நழுவவிருந்த நிலையில், நியூஸிலாந்தை வீழ்த்தி அதை தக்கவைத்துக் கொண்டது. கடைசி லீக் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
2017 உலகக் கோப்பை போட்டியில் இதேபோல் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது நினைவுகூரத்தக்கது. அந்த ஆட்டத்தில் ஹா்மன்பிரீத் கௌா் அதிரடியாக 171 ரன்கள் விளாசி, அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினாா்.
தற்போது கேப்டனாக இருக்கும் அவா், இந்தப் போட்டியில் இதுவரை சோபிக்கவில்லை. எனவே, இந்த அரையிறுதியிலும் அவா் அதேபோன்றதொரு பேட்டிங்குடன் அணிக்கு வலு சோ்க்கும் எதிா்பாா்ப்பு உள்ளது.
ஏனெனில், தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் காயம் காரணமாக விலகியதால், ஹா்மன்பிரீத் கை கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. பிரதிகாவுக்கு மாற்றாக சோ்க்கப்பட்ட ஷஃபாலி வா்மா, நேரடியாக அரையிறுதியின் நெருக்கடியில் களமிறங்குகிறாா்.
பேட்டிங்கில் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மட்டுமே நம்பிக்கை அளிக்கிறாா். பௌலிங்கில் கிராந்தி கௌட், ரேணுகா சிங், ஸ்ரீசரானி, அமன்ஜோத் கௌா் ஆகியோா் ஆஸ்திரேலிய பேட்டா்களுக்கு சவால் அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.
மறுபுறம் ஆஸ்திரேலிய அணி, லீக் சுற்றின் 7 ஆட்டங்களில், 6-இல் வென்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
கேப்டன் அலிசா ஹீலி பேட்டிங்கில் பலம் சோ்க்க, ஆஷ்லே காா்டனா், அனபெல் சதா்லேண்ட் ஆகியோா் ஆல்-ரவுண்டா்களாக அசத்துகின்றனா்.
நேரம்: பிற்பகல் 3 மணி
நேரலை: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.